ஜோகூர் பாரு, மார்ச் 6 – ( JDT ) எனப்படும் Johor Darul Ta’zim காற்பந்து குழுவினர் 2 -0 என்ற கோல் கணக்கில் கெடா டாருல் அமான் FC ( Kedah Darul Aman FC) குழுவை வீழ்த்தி தொடர்ந்து நான்காவது முறையாக Charity கிண்ணத்தை வென்றனர்.
இஸ்கந்தர் புத்ரியிலுள்ள சுல்தான் இப்ராஹிம் விளையாட்டரங்கில் நேற்றிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தை காண்பதற்கு காற்பந்து ரசிகர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. JDT குழுவின் இரண்டு வெற்றி கோல்களும் 34 ஆவது நிமிடத்தில் Muhammad Safawi Rashid மற்றும் 67 ஆவது நிமிடத்தில் Natxo Insa அடித்தனர்.
2015ஆம் ஆண்டு முதல் ஏழு முறை இறுதியாட்டத்திற்கு தேர்வு பெற்ற JDT குழு இதுவரை ஆறு முறை Charity கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இவ்வாண்டுக்கான மலேசிய சூப்பர் லீக் காற்பந்து போட்டி தொடங்கியதற்கு அடையாளமாக நடைற்ற சேரிட்டி கிண்ண காற்பந்து போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் JDT மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது. இவ்வாண்டு சூப்பர் லீக் சாம்பியன் பட்டத்தை பெறுவதற்கு JDT குழு தயாராகிவிட்டது என்பதை இதர குழுக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கெடா குழுவுடனான நேற்றைய ஆட்டத்தின் இந்த வெற்றி அமைந்தது.
சூப்பர் லீக் காற்பந்து போட்டியில் JDT குழு தனது அடுத்த ஆட்டத்தில் பினாங்கு எப்.சி குழுவுடன் மோதும், அதே வேளையில் கெடா டாருல் அமான் காற்பந்து அணி செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் ஆட்டத்தில் SABAH குழுவுடன் மோதவிருக்கிறது.