ஈப்போ, மார்ச் 29 – இம்மாதம் 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் பேரா மாநில டி.ஏ.பி தேர்தலில் ஙா கோர் மிங்- ஙே கூ ஙாம் ( Nga Kor Ming- Ngeh Koo Ham) தலைமையிலான அணியை வீழ்த்துவதற்கு ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் மற்றும் கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் தாமஸ் சூ ( Thomas Su ) வியூகம் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 ஆண்டு காலமாக பேரா மாநில டி.ஏ,பி தலைமைத்துவம் மாமன் மற்றும் மைத்துனர்களான Nga Kor Ming –Ngeh Koo Ham தலைமையில் இயங்கி வருகிறது. அந்த இருவரின் ஆக்கிரமிப்பை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இப்போது குலசேகரன் – தோமஸ் சூ கை கோர்த்துள்ளனர்.
மாநில டி.ஏ.பியின் நிர்வாக குழுவுக்கு எந்த அணியைச் சேர்ந்த்தவர்கள் போட்டியிட்டாலும் அதிக வாக்கு பெறும் 15 பேர்களைக் கொண்டுத்தான் மாநில டி.ஏ.பி நிர்வாகக் குழுவுக்கு பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பார்கள். தேர்வு பெற்றவர்களில் ஒருவர் மாநில தலைவர், துணைத்தலைவர் மற்றும் இருவர் மாநில உதவித் தலைவர்களாகவும் நியமிக்கப்படுவர். அந்த வகையில் தற்போது பேரா மாநில டி.ஏ.பி கைப்பற்றுவதற்கு தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங் தலைமையிலான அணியும் தோமஸ் சூ அணியும் பலப்பரிட்சையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் மாநில டி..ஏ.பி அமைப்பு செயலாளரான தோமஸ் சூ முன்னாள் மனித வள அமைச்சர் குலசேகரன் உட்பட தமது அணியில் போட்டியிடும் 15 பேரின் பட்டியலை வெளியிட்டார். பாசீர் பெண்டாமார் சட்டமன்ற உறுப்பினர் டெரன்ஸ் நாயுடு, பொக்கொ அசாம் சட்டமன்ற உறுப்பினர் லீயு தேய் யீ மற்றும் மகிழம்பு சட்டமன்ற உறுப்பினர் கியோங் மெங் சிங் ஆகியோரும் தோமஸ் சூ அணியில் இடம்பெற்றுள்ளனர்.
அதே வேளையில் ஙா கோர் மிங் அணியில் அவ்லோங் சட்டமன்ற உறுப்பினரும் புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ஙேவும் , இடம் பெற்றுள்ளனர். நடப்பு மாநில உதவித் தலைவரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் , பேரா ஆட்சிக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான சிவநேசன் மற்றும் மேலும் சில இந்தியர்களும் ஜ.செ.க நிர்வாகக் குழு உறுப்பினராக போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 300 கிளைகளைச் சேர்ந்த 2,000 பேராளர்கள் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அடுத்த மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர்.
1997ஆம் ஆண்டு முதல் தோமஸ் சூவும் குலசேகருணம் மாநில பொருளாளர் மற்றும் செயலாளர்களாக இருந்துள்ளனர். ஆனால் தற்போது ஙா கோர் மிங் தலை மையிலான மாநில டி.ஏ.பி தலைமைத்துவத்துடன் அவர்களது நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.