கோலாலம்பூர், மார்ச் 6- ஜூலை மாதம் பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் பொருட்டு அஸ்மின் அலி துணைப்பிரதமராக நியமிக்கப்படுவது குறித்து கட்சியின் உச்சமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக சமுக வலைத் தளங்களில் வெளியான தகவலை பெர்சத்து கட்சி மறுத்துள்ளது. மேலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியில் இணைவார்கள் என அஸ்மின் அலி கூறியதாக வெளியான தகவலும் உண்மையல்ல என பெர்சத்துவின் தலைமைச் செயலாளர் ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார்.
வியாழக்கிழமை நடைபெற்ற பெர்சத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் அஸ்மின் அலி துணைப்பிரதமராக நியமிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக வெளியான தகவல் முழுக்க முழுக்க பொய்யான செய்தி என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் ஹம்சா ஜைனுடின் கூறினார்.
அந்த உச்சமன்ற கூட்டத்தில் எட்டு அம்சங்கள் குறித்து முடிவு காணப்பட்டதாக சமுக வலைத்தளங்களில் வெளியான தகவலிலும் உண்மையில்லை என அவர் தெரிவித்தார். அஸ்மின் அலி துணைப்பிரதமராக நியமிக்கப்படுவார் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெறும் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு கட்சி உறுப்பினர்கள் ஆயத்தமாகும்படியும் பெர்சத்து கேட்டுக்கொண்டதாக வெளியான தகவலை ஹம்சா ஜைனுடின் மறுத்தார்.
இத்தகைய பெய் செய்திகளை பரவுப்புவோருக்கு எதிராக பெர்சத்து கட்சி போலீசில் புகார் செய்யும் என்றும் ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார். அதோடு பொய்யான செய்தியை பரப்பும் தரப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பெர்சத்து கட்சி தயங்காது என்றும் அவர் எச்சரித்தார்.