இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் பலாத்காரத்திற்கு இலக்கான இளம்பெண், தொடர் மிரட்டலுக்கு பயந்து குடியிருப்புக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் சம்பால் மாவட்டத்திலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பலாத்காரத்திற்கு இலக்கான நிலையில், அவர் அளித்துள்ள புகாரை திரும்பப் பெற கடும் நெருக்கடி அளிக்கப்பட்டு வந்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் குடும்பத்தினர் தொடர்ந்து மிரட்டலும் துன்புறுத்தலும் அளித்து வந்துள்ளனர்.
ஆனால் பொலிஸ் தரப்பில், இந்த விவகாரம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்,
மனமுடைந்த 22 வயதேயான இளம்பெண் தமது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது உடல் தற்போது உடற்கூராய்வுக்காக மருத்துவமனையில் பாதுகாக்கப்படுகிறது. மிரட்டலும் துன்புறுத்தலும் காரணமாகவே தமது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தாயார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சம்பவம் நடந்த பின்னர் சுமார் 5 மாதங்கள் வரை, தமக்கு நேர்ந்த கொடுமையை அவர் பெற்றோரிடம் கூறவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியதாலையே, அவர் பல மாதங்கள் மெளனம் காத்தார் என பொலிஸ் தரப்பும் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் சம்பால் பகுதி பொலிசாரை அணுகி புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார், குற்றவாளியை கைது செய்தனர்.