கோலாலம்பூர், மார்ச் 8 – கோவிட் பெருந்தொற்றினால் கடந்தாண்டு செப்டம்பரில் முழுமையாக மூடப்பட்ட ஆரம்பப் பள்ளிகள் இன்று முதல் முறையாக, முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளன.
மார்ச் ஒன்றில், பாலர் பள்ளி மாணவர்கள், முதலாம் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆகியோர் பள்ளிக்குத் திரும்பிய வேளையில், இன்று மூன்றாம் ஆண்டிலிருந்து ஆறாம் ஆண்டு வரையிலான மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பினர்.
இன்று ஏறக்குறைய 30 லட்சம் மாணவர்கள் , நாடு முழுவதும் ஆரம்பப் பள்ளிகளில் நேரடி கற்றல் கற்பித்தலில் ஈடுபட்டிருப்பதாக கல்வியமைச்சர் டத்தோ டாக்டர் ரட்சி ஜிடின் (Datuk Dr Radzi Jidin ) தெரிவித்தார்.
முன்னதாக இன்று காலை அவர், சிரம்பான், கிங் ஜோர்ஜ் V (King George V ) தேசியப் பள்ளிக்கு வருகை தந்தார்.
காலையில் பள்ளிக்கான மாணவர்களின் வருகை சுமூகமாக இருந்தது; இந்நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்களை,அழைத்துச் செல்ல வரும் பெற்றோர்கள், சில கட்டுப்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பைத் தருவார்கள் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
பள்ளி நேரம் முடிந்து ஒரே நேரத்தில் மாணவர்கள் அனைவரும் வகுப்புகளில் இருந்து வெளியேறாமல் இருக்க, அவர்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது; கட்டம் கட்டமாக மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்து வெளியேறுவார்கள் என்பதால், தங்களது பிள்ளைகளை அழைத்துச் செல்வதில் பெற்றொர்கள் 10 லிருந்து 20 நிமிட தாமதத்தை எதிர்நோக்குவார்கள்.
இதனிடையே, பள்ளிகளில் கோவிட் தொற்று பரவல் குறித்து கருத்துரைத்த அமைச்சர், ஆசிரியர்கள் – மாணவர்கள் மத்தியில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாகக் கூறினார்.