அரசாங்கம் அதிகளவில் பணத்தை அச்சிட்டு வருவதால், இந்த வருட இறுதிக்குள் பொருட்களின் விலைகள் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு – பெரள்ளை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற “பச்சை இரத்தம்” இளைஞர் அமைப்பின் கலந்துரையாடல் ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் வருமானத்தை குறைத்துக் கொண்டதால், அரசாங்கத்தின் சாதாரண வேலைகளை செய்யக்கூட வருமானம் இல்லை. இதனால் பணத்தை அச்சிட்டு வருகிறது.
2010ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் மற்றும் 2015ஆம் ஆண்டு எமது அரசாங்கத்தின் கீழ் அச்சிட்ட பணத்தை ஒப்பிடும் போது தற்போதைய அரசாங்கம் மூன்று மடங்கு அதிகமான பணத்தை அச்சிட்டுள்ளது.
நாங்கள் அன்று கையளித்து சென்ற 750 கோடி டொலர் அந்நிய செலாவணி கையிருப்பு தற்போது 450 கோடி டொலர்களாக குறைந்துள்ளது.
எமது அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என குற்றம் சுமத்தினர். எனினும் நாங்கள் பொருளாதாரத்தை முன்னேற்றினோம். தற்போதுதான் அது புரிகின்றது.
நாங்கள் சுகாதார துறைக்கு அதிகளவில் நிதியை செலவிட்டோம். அவசர சிகிச்சை பிரிவுகளை அதிகரித்தோம். சுவசெரியவை ஆரம்பித்தோம். அதேபோல் கல்விக்கும் அதிகளவான நிதியை ஒதுக்கினோம்.
நாங்கள் டெப் வழங்க முயற்சித்த போது அதனை அனைவரும் எதிர்த்தனர். அன்று டெப் வழங்கி இருந்தால், தற்போது கல்வி பிரச்சினையில் ஒரு பகுதி தீர்க்கப்பட்டிருக்கும்.
டெப் இறக்குமதி செய்ய தற்போது நிதியில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.