பதவிக்காலம் முடிந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள 9 மாகாணசபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.
தொடர்ந்தும் மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்ற காரணத்திலும், கோவிட் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்துள்ளமையை அடிப்படையாக கொண்டும் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என அரசாங்கத்திற்குள் பேசப்பட்டுள்ளது.
அத்துடன் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 340 உள்ளூராட்சி சபைகளில், 200 சபைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியது. அப்போது நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்து வந்தது.
இம்முறையும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற முடியும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர் என சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.