கடல் பயணம் செய்வதை விரும்பும் மக்களைக் கொண்ட பிரித்தானியாவில், மே மாதம் 17ஆம் திகதி முதல் கப்பல் போக்குவரத்து துவங்க இருப்பதாக அத்துறையின் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடல் மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சரான Robert Courts, மே மாதம் 17ஆம் திகதி வாக்கில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் பொதுமுடக்க விலக்கல் திட்டத்தின்படி, கப்பல் போக்குவரத்தை துவக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி கப்பல் போக்குவரத்து தொழிலில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளது.
அதே நேரத்தில், கப்பல் பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
2020ஆம் ஆண்டு, மார்ச் மாதம் முதல், கப்பல் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் மக்களைக் கேட்டுக்கொண்டிருந்தது.
ஜூன் மாதம் கப்பல் பயணம் மீதான கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டாலும், ஆறுகளில் கப்பலில் பயணம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டதேயொழிய, கடலில் பயணம் செய்ய இன்னமும் தடை அமுலில் உள்ளது.
இந்நிலையில்தான், தற்போது மே மாதம் 17ஆம் திகதி முதல் கப்பல் போக்குவரத்து துவங்க இருப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.