நாட்டினுள் முதலாவது கொவிட்-19 தொற்றுறுதியான இலங்கையர் அடையாளங்காணப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.
மத்தேகொடை பகுதியை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியான ஜயந்த ரணசிங்கவிற்கே இவ்வாறு தொற்றுறுதியானது.
அவருக்கு கடந்த வருடம் மார்ச் மாதம் 4 ஆம் திகதி கொவிட்-19 நோயிக்கான அறிகுறிகள் தென்பட்டிருந்த நிலையில் கடந்த வருடம் இதேநாள் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் அடையாளங்காணப்பட்ட 340 கொவிட்-19 நோயாளர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானர்கள் பதிவாகியுள்ளனர்.
அந்த மாவட்டத்தில் 62 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் 39 பேருக்கும், கொழும்பில் 34 பேருக்கும், கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.
மன்னார் பிரதான மீன் சந்தையுடன் தொடர்புடைய கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.வினோதன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களில் குறித்த சந்தையுடன் தொடர்புடைய 8 பேருக்கும், அவர்களுடன் தொடர்புடைய 5 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு மீன் சந்தையில் இதுவரை 79 ஆயிரத்து 798 கொவிட்19 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக கொவிட்19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் தற்போது கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையப்படுத்தி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இதுவரை 7 லட்சத்து 52 ஆயிரத்து 98 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.