ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. சிறுநீரகங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவம், சிறுநீரக நோயின் தாக்கத்தைக் குறைப்பதும் தான் இந்நாளின் நோக்கமாக உள்ளது.
சுமார் 30 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் பலருக்கு இது இருப்பது தெரிவதில்லை. ஏனெனில் இந்நோயின் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. இருப்பினும், சிறுநீரக நோய் ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனை மற்றும் இது இதயம் மற்றும் கரோடிட் தமனி நோய் போன்ற பிற ஆரோக்கிய பிரச்சனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. கரோடிட் தமனி நோய் முற்றிய நிலையில் இருக்கும் போது, அது பக்கவாத அபாயத்தை அதிகரிக்கும்.
எனவே சிறுநீரகங்களை கவனித்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். சரி, சிறுநீரகங்களை எவ்வாறு கவனித்துக் கொள்வது? என்று நீங்கள் கேட்கலாம். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க எப்படி ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கிறோமோ, அதேப் போல் தான் ஆரோக்கியமான விஷயங்களை பின்பற்றுவதன் மூலம், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். கீழே சிறுநீரக நோய்கள் வராமல், சிறுநீரகங்களை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலே, சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
சிவப்பு குடைமிளகாய்
சிவப்பு குடைமிளகாயில் பொட்டாசியம் குறைவாக உள்ளது. அதே சமயம் வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின் பி6, நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி ஒரு ஆன்டி-ஆக்ஸிடனட் மற்றும் இது ஆற்றல் உற்பத்தி, இரத்த ஓட்டம் மற்றும் மெட்டபாலிசம் போன்றவற்றில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு உதவுகிறது. மேலும் இதில் உள்ள லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், சிறுநீரகங்களை ஆரோக்கியமாகவும், சிறுநீரக செயலிழப்பு ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
முட்டைக்கோஸ்
நார்ச்சத்து, ஃபோலேட், வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்றவை அதிகம் கொண்டது தான் முட்டைக்கோஸ். இதில் உள்ள நார்ச்சத்து, ஊட்டச்சத்துக்களை மெதுவாக உறிஞ்ச செய்கிறது. இதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு இரத்த ஓட்டத்தில் வருவதை சமாளிக்க நேரத்தைத் தருகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, சிறுநீரக பாதிப்புக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்றான இரத்த சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கிறது. அதோடு இது செரிமான பாதையில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ஆரோக்கியமான இரத்தம் உறைதலில் வைட்டமின் கே முக்கியமானது. முட்டைக்கோஸில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளாக செயல்படுகிறது.
காலிஃப்ளவர் மற்றும் ப்ராக்கோலி
இந்த காய்கறிகளில் வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் அதிகம் உள்ளது. காலிஃப்ளவரில் நார்ச்சத்து மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக நிறைந்துள்ளது. இந்த வகை காய்கறிகள் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் சிறுநீரகங்களில் ஏற்கனவே பிரச்சனை உள்ளவர்கள், இந்த காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும்.
கீரைகள்
பச்சை இலைக் காய்கறிகளான கீரைகளில், வைட்டமின் சி, ஃபோலேட், நார்ச்சத்து, வைட்டமின் கே மற்றும் பிற பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் உள்ளதால், இது சிறுநீரகங்களில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கவும், அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.
பூண்டு
பூண்டு, வெங்காயம், சின்ன வெங்காயம் போன்றவற்றில் அல்லிசின் உள்ளது. அல்லிசின் ஒரு கரிம சல்பர் கலவை ஆகும். இது சில வலிமையான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது, இரத்த அழுத்தத்தில் நன்மை பயக்கும் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக செயல்படலாம்.
அஸ்பாரகஸ்
அஸ்பாரகஸ் நார்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு உணவுப் பொருள். இதில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் இது சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையை சுத்தம் செய்யும். ஆனால் ஏற்கனவே சிறுநீரக நோய் உள்ளவர்கள், அஸ்பாரகஸ் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக உள்ளது.
ஆப்பிள்
ஆப்பிளில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. ஆப்பிளில் இருக்கும் நார்ச்சத்து, உடல் அவற்றை உறிஞ்சுவதற்கு முன்பு செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை பிணைத்து வெளியேற்றி, சிறுநீரகங்களின் சுமையைக் குறைக்கிறது. மேலும் ஆப்பிள்கள் உடலினுள் உள்ள அழற்சி/வீக்கம் மற்றும் கொழுப்புக்களைக் குறைக்கின்றன.
பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்கள் குறைந்த கலோரி மற்றும் இனிப்புக்களைக் கொண்டது. இதில் உள்ள சில சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள், சிறுநீரக செல்கள் மற்றும் நெஃப்ரான்கள் சேதமடைவதைத் தடுக்கின்றன. மேலும் இவை உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கும் மற்றும் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் மாங்கனீசு போன்றவற்றைக் கொண்டுள்ளன.
குறிப்பாக கிரான்பெர்ரி சிறுநீரக மண்டலத்தின் செயல்பாட்டை மென்மையாக்கி, தொற்றுக்களைத் தடுக்கக்கூடியது. ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் செர்ரி போன்ற அனைத்தும் சிறுநீரகங்களை சுத்தம் செய்வதோடு பாதுகாக்கவும் உதவுகின்றன.
தர்பூசணி
தர்பூசணியில் நீர்ச்சத்து மட்டுமின்றி, அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளதால், இவை சிறுநீரகங்கள், இரத்தம் மற்றும் சிறுநீர்ப்பையை சுத்தம் செய்ய உதவுகின்றன. மேலும் தர்பூசணியில் லைகோபைன் அதிகம் உள்ளது. லைகோபைன் தான் தர்பூசணிக்கு சிவப்பு நிறத்தை அளிக்கின்றன. இந்த லைகோபைன் ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்படக்கூடியது. எனவே இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு, சிறுநீரகங்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.