தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பு மனுத்தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20-ந் திகதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற 22-ந் திகதி கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வேட்புமனு விண்ணப்பங்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம் என தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ந் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
அத்துடன் காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டையும் இறுதி செய்யும் நிலையில் உள்ளன.
அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் எந்த நேரத்திலும் வெளியிட தீவிரம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.