தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார். ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘சர்வம் தாளமயம்’, ரவி அரசுவின் புதிய படம், சசி இயக்கத்தில் ஒரு படம் என ஐந்து படங்கள் தற்போது இவரின் கைவசம் உள்ளன.இதுதவிர இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘புரூஸ்லி’ திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கி வரும் ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போனதால், தற்போது படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த இடைவெளியைப் பயன்படுத்தி புதிய படமொன்றை இயக்கத் திட்டமிட்ட வெற்றிமாறன் ஜி.வி.பிரகாஷை சந்தித்து கதை சொல்ல, கதை பிடித்துப் போனதால் ஜி.வி.பிரகாஷும் உடனே கால்ஷீட் கொடுத்து விட்டார். தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஸ்ரீகிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’,’விசாரணை’ போன்ற படங்களுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் தற்போது அவரது இயக்கத்திலேயே நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.