சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணி, 220 ஒட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை அவுஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸிற்காக 8 விக்கெட் இழப்புக்கு 538 ஒட்டங்களை பெற்றிருந்த வேளை பாகிஸ்தான. அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
இதன்போது அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்ச ஒட்டமாக, ரின்செவ் 184 ஒட்டங்களையும், வோர்னர் 113 ஒட்டங்களையும், அன்டஸ்கோம் 110 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைதொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 315 ஒட்டங்களுக்கு சுருண்டது. அணியின் அதிகபட்ச ஒட்டமாக, யூனுஸ்கான் ஆட்டமிழக்காது 175 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.
223 ஒட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 241 ஒட்டங்களை பெற்றிருந்த வேளை, பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
465 ஒட்ட வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியால், 244 ஒட்டங்கள் மாத்திரமே பெற முடிந்தது. இதனால், அவுஸ்திரேலிய அணி, 220 ஒட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக டேவிட் வோர்னரும், தொடரின் ஆட்ட நாயகனாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தும் தெரிவுசெய்யப்பட்டனர்.