விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ‘ஏகாதசி விரதம்’. இந்த விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனைக் கொடுக்கும் என்கிறது புராணங்கள். ‘காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை; கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை’ என்று இந்த விரதத்தை மகிமைப் பற்றி அக்னி புராணம் எடுத்துரைக் கிறது. இந்த விரதத்தின் சிறப்பு பற்றி சிவபெருமானே, பார்வதி தேவியிடம் எடுத்துக் கூறியுள்ளார் என்பது புராணங்கள் கூறும் தகவல். மாதம் இரு ஏகாதசி என்று 24 ஏகாதசிகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கிறது. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள்.
முன் காலத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அவன் தேவர்களையும், முனிவர்களையும் துன்பப்படுத்தினான். அவன் செய்த கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவபெருமானோ, அவர்களை திருமாலிடம் சென்று முறையிடும்படி கூறினார். அதன்படியே தேவர்களும், முனிவர்களும், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமாலை சந்தித்தனர். காக்கும் தெய்வமான அந்தக் கருணைக் கடவுள், தேவர்களோடு சேர்ந்து முரனை எதிர்த்து போரிட்டார். போரால் களைப்படைந்த திருமால், பத்ரிகாசிரமம் என்ற இடத்தில் உள்ள ஒரு குகையில் பள்ளிகொண்டார்.
அந்த இடத்திற்கு, திருமாலைத் தேடிவந்த முரன், பள்ளிகொண்டிருந்த திருமாலைக் கொல்ல நினைத்து உடைவாளை உருவினான். அப்போது திருமாலின் உடலில் இருந்து ஒரு பெண் தோன்றி, முரனை அழித்தாள். இது நடந்தபின் கண் விழித்த திருமால், அந்தப் பெண்ணைப் பாராட்டி, அவளுக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டார்.
ஏகாதசி என்று பெயரிடப்பட்ட அந்தப் பெண், திருமாலிடம் வரம் ஒன்றைக் கேட்டாள். ‘ஏகாதசி அன்று தங்களை (திருமால்) நினைத்து நல்ல மனதுடன் யார் விரதம் இருக்கிறார்களோ, அவர்களைக் காத்தருள வேண்டும்’ என்று வேண்டினாள். அன்று முதல் இந்த விரதம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புராணக் கதைகள் தெரிவிக்கின்றன.
வைகுண்ட ஏகாதசி அன்று, விஷ்ணு ஆலயங்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தப்படும். இறைவனை தொழும் ஜீவாத்மா, வைகுண்ட வாசலில் வழியாக பரமாத்மாவை சேருகிறது என்ற ஐதீகத்தின் அடிப்படையில், இந்த சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறு கிறது. இந்த விழா அதிகாலை வேளையிலேயே நடை பெறும். இதில் மக்கள் பலரும் கலந்து கொண்டு, இறைவனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை கண்டுகளித்து, சொர்க்க வாசலின் வழியாக வெளியே வருவார்கள்.