சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 9 வயதுடைய சிறுமி, அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வருகிறாள்.
இவள் தினமும் பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை பள்ளிக்கு சென்ற அந்த மாணவி சிறிது நேரத்தில் அழுதுக் கொண்டே வீட்டுக்கு திரும்பி வந்தாள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், என்ன நடந்தது என்று மாணவியிடம் விசாரித்தனர். அப்போது அந்த மாணவி தனது பெற்றோரிடம், பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது என்னை வாலிபர் ஒருவர் வாயை பொத்தி ஒரு வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர் என்னை நிர்வாணமாக்கி செல்போனில் படம் பிடித்துவிட்டு 5 ரூபாயை கொடுத்ததாக கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவியை அழைத்து சென்றதாக கூறப்படும் வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாணவி கூறிய இடத்தில் 7 வீடுகள் தொடர்ச்சியாக உள்ளன. இதில் சில வீடுகள் பூட்டி கிடக்கின்றன.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அங்கப்பன் தலைமையில் பொலிசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார், மாணவியை வாலிபர் அழைத்து சென்றதாக கூறப்படும் வீட்டு மொட்டைமாடிக்கு சென்றனர். ஆனால், அங்கு யாரும் இல்லை.
மேலும் இதுதொடர்பாக பொலிசார் அருகில் உள்ள வீட்டில் வசித்து வருபவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து பள்ளி மாணவியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை தேடி வருகின்றனர்.