பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட 48 மணி நேரத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தமது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பைசல் சுல்தான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்ட பிரதமர் இம்ரான்கான், நாட்டு மக்களும் அச்சம் தவிர்த்து, தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு உதவும் வகையில் சீனா அரசு 5 லட்சம் டோஸ்கள் சினோபாம் மருந்தை இலவசமாக வழங்கி உள்ளது. இந்த மருந்தை பயன்படுத்தி தற்போது நாடு முழுவதும் முதற்கட்ட தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் மிகவும் மோசமாக பாதிப்புக்கு உள்ளாகி வரும் பகுதிகளை அடையாளம் கண்டு ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவரும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து சந்தைகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவகங்கள் இப்பகுதிகளில் மூடப்பட்டிருக்கும்.
இருப்பினும், மளிகைக் கடைகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பேக்கரிகள், இறைச்சி மற்றும் பால் கடைகள் திறந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானை பொருத்தமட்டில், தற்போது சீனாவின் சினோபாம் தடுப்பு மருந்து மட்டுமே பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.