மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் தனது முதல் இன்னிங்ஸுக்காக பெற்றுள்ளது.
சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்குமிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இலங்கை நேரப்படி நேற்றிரவு 7.30 மணிக்கு ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணித் தலைவர் கிரெய்க் பிராத்வைட் முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இலங்கை அணியை பணித்தார்.
அதன் பிரகாமரம் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 69.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
லஹிரு திரிமான்ன 70 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 32 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற, அணியின் ஏனைய வீரர்கள் சொப்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும், கெமர் ரோச் 3 விக்கெட்டுகளையும் மற்றும் ராகீம் கார்ன்வால் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
அதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியானது நேற்றைய முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ஓட்டங்களை பெற்றுள்ளது.
கிரெய்க் பிராத்வைட் 3 ஓட்டத்துடனும், ஜோன் காம்ப்பெல் 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.