விதுர நீதி என்றொரு புத்தகத்தை படித்த ஞாபகம் உண்டு. பாரத இதிகாசத்தில் விதுரன் என்ற பாத்திரம் நமக்கு மிகவும் பிடித்தமானது.
வில்லுக்கு விஜயன் என்பது பின்பு வந்த அடைமொழி. கெளரவர் சபையில் விதுரன் வில் முறிக்கும் வரை வில்லுக்கு விதுரன் என்றே இருந்தது.
வில்லுக்கு விதுரன் என்ற மிகப்பெரும் புகழையும் மதிக்காமல் விதுரன் தன் வில்லை முறித்தான். இனிமேல் வில்வெடுக்க மாட்டேன் என்ற சபதம்தான் அது.
நீதியின் பக்கம்; தர்மத்தின் பக்கம் நிற்பதே தனக்கு ஒப்பானது என்ற முடிவினால் பாண்டவர் அம்பு விதுரனைப் பதம் பார்க்கவில்லை என்றோ அல்லது விதுரனின் அம்பு பாண்டவர்களைத் தீண்டவில்லை என்றோ கூறிக்கொள்ளலாம்.
ஆனால் கெளரவர் சேனையில் இருந்து விலக முடியாத வீஷ்மரும் துரோணரும் குருஷேத்திரப் போரில் இறக்க வேண்டியதாயிற்று.
உரிய நேரத்தில் தகுந்த தீர்மானம் எடுக்கத் தவறினால், அழிவது உறுதி என்பது விதுரன் நமக்குத் காட்டி நிற்கும் நீதி.
இது ஒருபுறம் இருக்க, தமிழர்களின் கோரிக்கைகள் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் நிராகரிக்கப்பட்டால், அந்த அரசியலமைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிக்கும் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கூட்டத்திலேயே இரா.சம்பந்தர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கூறிக் கொண்டாலும் எடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும் தனி மனித அல்லது இருவர் எடுக்கின்ற தீர் மானங்களாகவே இருந்தன.
இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வெளிப்படைத் தன்மையற்றவையாகவும் ஒருபக்கம் சார்ந்ததாகவும் இருந்துள்ளன.
எனினும் நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இடம்பெற்றிருக்கக்கூடிய பங்காளிக் கட்சிகளைச் சந்தித்து கருத்துப் பரிமாறுவதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் உடன்பட்டமை பெரிய காரியம் எனலாம்.
இக்கூட்டத்தில் முக்கியமான விடயங்கள் பேசப்பட்டுள்ளன.
இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் நிராகரிக்குமாக இருந்தால், அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நாம் நிராகரிப்போம் என்று சம்பந்தர் கூறியுள்ளார்.
சம்பந்தர் கூறியதற்குள் இருக்கக்கூடிய உண்மைத் தன்மைகள், சாத்தியப்பாடுகள் பற்றிய பரிசோதனையில் நாம் ஈடுபட விரும்பவில்லை.
ஆனால் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றத் தவறுமாயின் எங்கள் எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்துவோம் என சம்பந்தர் அவர்கள் துணிச்சலோடு கர்ச்சிக்க வேண்டும்.
எனினும் அவர் அதை வெளிப்படையாகக் கூறாமல் தன் தலைமையில் இருக்கக்கூடிய கட்சியில் இடம்பெற்றிருக்கும் பங்காளிக் கட்சிகளைச் சமாளிப்பதற்குக் கூறப்பட்டது போல கூறியுள்ளார்.
இங்கு தான் விதுரன் வில்லை உடைத்த காட்சி தெரிகிறது.ஆம், எங்கள் இனத்துக்கு எந்தப் பிரயோசனமும் இல்லாத அல்லது எங்களுக்கு எதிரான அரசியலமைப்புகளை நம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
இலங்கையில் தமிழ் மக்கள் சிறுபான்மை என்பதற்காக அவர்களை ஆட்சியாளர்கள் எதுவும் செய்யலாம் என்று நினைத்துவிடக்கூடாது.
இதற்காகத்தான் விதுரன் வில் முறித்த சம்பவத்தை இவ்விடத்தில் சுட்டிக்காட்டினோம்.
நாமும் சில இடங்களில் வில் முறிப்பது போலாவது காட்டிக் கொள்ளவேண்டும்.
இல்லையேல் நல்லவன் என்று சொன்னதற்காக அடி வாங்கும் நடிகர் வடிவேலுவின் கதையாகத்தான் நம் கதையும் முடிந்து போகும்.