நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கையில் கலப்பு விசாரணை நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதனை அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்திருக்கிறது.
இந்த அறிக்கையை முழுமையாகப் படிப்பதற்கு முன்னதாகவே அரசாங்கத்திடமிருந்து அவசர கதியில் நிராகரிப்பு வந்திருக்கிறது. மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் காலத்தையே இது நினைவுபடுத்துவதாக உள்ளது.
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஒரு செயலணி சுதந்திரமான சிவில் சமூகப் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு செயலணியே வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு விசாரணை நீதிமன்றம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதை பரிந்துரைத்திருக்கிறது.
நீதிபதிகள் மாத்திரமன்றி விசாரணையாளர்கள், வழக்கு தொடுநர்கள், சட்டத்தரணிகள் என அதன் கட்டமைப்பிலும் கூட வெளிநாட்டு பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதை செயலணியின் அறிக்கை வலியுறுத்தியிருக்கிறது.
அறிக்கை வெளியிடப்பட்டதையடுத்து கொழும்பில் கடந்த வியாழக்கிழமை நடத்தியிருந்த செய்தியாளர் சந்திப்பிலும் கூட செயலணியின் உறுப்பினர்கள் இதனை வலியுறுத்திக் கூறியிருந்தனர்.
போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க கலப்பு விசாரணை நீதிமன்றம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று தாம் வலியுறுத்தி இருப்பதற்கு இரண்டு காரணங்கள்“ இருப்பதாக இந்தச் செய்தியாளர் சந்திப்பில் செயலணியில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்நாட்டு நீதித்துறை மீது நம்பிக்கையற்ற நிலை காணப்படுகிறது என்பது முதலாவது காரணம்.
இத்தகைய குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு போதிய நிபுணத்துவம் உள்நாட்டவர்களிடம் இல்லையென்பது இரண்டாவது காரணம்.
இந்த இரண்டு நியாயமான காரணிகளை முன்வைத்தே கலப்பு விசாரணை நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை கலந்தாலோசனைச் செயலணி முன்வைத்திருக்கிறது.
ஏற்கனவே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையிலும் இதே பரிந்துரைதான் 2015ம் ஆண்டில் முன்வைக்கப்பட்டிருந்தது.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையில் பரிந்துரையை உள்ளடக்கிய ஜெனிவா தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கி அதனை நிறைவேற்றுவதாக ஒப்புதல் அளித்த இலங்கை அரசாங்கம் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.
கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஏற்க முடியாது என்றும் நம்பகமான உள்நாட்டு விசாரணை தான் நடத்தப்படும் என்றும் கூறியது. ஐநாவுக்கும் இது கூறப்பட்டது.
ஆனாலும் இலங்கையில் நடந்த மீறல்கள் குறித்த கலப்பு விசாரணைப் பொறிமுறை மூலம் தான் விசாரிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே ஐநா இன்னமும் இருக்கிறது.
கலந்தாலோசனை செயலணியின் அறிக்கை வெளியான பின்னர் ஐநா மனித உரிமைகள் பணியாளர் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தில் கலப்பு விசாரணை நீதிமன்றத்தை பரிந்துரைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி வெளியிட்டு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைன் கலப்பு விசாரணையையே தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதாவது இலங்கை அரசாங்கம் கலப்பு விசாரணைப் பொறிமுறையை உருவாக்க முடியாது என்று அறிவித்த போதும் தனது நிலைப்பாட்டில் இருந்து ஐநா மாறவில்லை என்பதையே அந்தக் கருத்து உறுதி செய்திருக்கிறது.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை வெளியான போது அதற்கு பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இலங்கைக்கு எதிரான சதி என்றனர். ராஜபக்சவினரையும் போர் வீரர்களையும் சர்வதேச நீதிமன்றத்துக்கு, தூக்கு மேடைக்கு கொண்டு செல்லும் சூழ்ச்சி என்றனர்.
யாரென்றே தெரியாத விசாரணையாளர்கள் எங்கிருந்து யாரிடம் நடத்தப்பட்டது என்று தெரியாத விசாரணை மூலம் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்று விமர்சித்தனர்.
இவ்வாறாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை இலங்கையில் மலினத் தனமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.
ஆனால் அந்த விச4ாரளைண அறிக்கையின் பல்வேறு விடயங்களுடன் உள்நாட்டில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஒரு செயலணியின் அறிக்கை ஒத்துப்போகிறது.
ஐநா விசாரணையாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட அதே கலப்பு விசாரணை நீதிமன்றத்தையே இந்தச் செயலணியும் பரிந்துரைத்திருக்கிறது.
இத்தகைய கட்டத்தில் கலப்பு விசாரணைக்கான பரிந்துரையும் கோரிக்கையும் வெறுமனே பழி தீர்க்கும் ஒரு விடயமல்ல. நம்பகமான விசாரணையை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒன்று என்பது உறுதியாகி இருக்கிறது.
ஆனால் அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன அறிக்கையைப் படிப்பதற்கான கால அவகாசத்தைப் பெறுவதற்கு முன்னரே கலப்பு விசாரணையை ஏற்க முடியாது. வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்பதை ஏற்கனவே அறிவித்து விட்டோம் என்று கூறியிருக்கிறார்.
அதுபோலவே நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவும் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இங்கு இடமில்லை என்று உறுதியாகக் கூறியிருக்கிறார்.
திஸ்ஸ விதாரண போன்ற அரசாங்கத்தில் இல்லாத அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் சிலரும் செயலணியின் இந்தப் பரிந்துரைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ இந்த அறிக்கை பற்றி எந்தக் கருத்தையும் இந்தப் பத்தி எழுதப்படுகின்ற வரையில் வெளியிடவில்லை.
எனினும் முடிந்த வரையில் அவர்கள் இது பற்றிக் கருத்து வெளியிடுவதை தவிர்க்கவே முனைவார்கள்.
கலப்பு விசாரணை நீதிமன்றம் என்ற விடயத்தை வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்பு என்பதை அரசாங்கத்துக்கு உள்ளே இருப்பவர்களும் வெளியே இருப்பவர்களும் நாட்டின் இறைமையுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முனைகின்றனர். அரசியல் அமைப்பு மீறலாகவும் அதனைக் காட்ட முனைகின்றனர்.
அரசியல் அமைப்பு என்பது மக்களுக்கானது. மக்களால் உருவாக்கப்பட்டதேயன்றி அது ஒன்றும் வேத வாக்கு அல்ல. மாற்ற முடியாத ஒன்றுமல்ல.
இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டம் வெளிநாட்டு நீதிபதிகளை அழைப்பதற்கு இடமளிக்கவில்லை என்றால் அதில் திருத்தங்களை முன்வைக்கலாம். அதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.
போர்க்குற்ற விசாரணை தொடர்பான வழக்குகள் விடயத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கும். இல்லையேல் இந்தப் பிரச்சினைளக்கு நிலையான தீர்வைப் பெற முடியாது.
ஏனென்றால் போர்க்குற்றங்கள் மற்றும் அவற்றுக்கான தண்டனைகள் பற்றி இலங்கையின் சட்டங்களில் எதுவுமே கூறப்படவில்லை. ஆனால் இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்திருக்கின்ற சூழலில் தற்கால நவீன உலக நடைமுறைகளுடன் ஒன்றிப்போக வேண்டியுள்ள சூழலில் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது.
எனவே வெளிநாட்டு நீதிபதிகளை தேவைப்பட்டால் உள்ளீர்க்கும் சட்டங்களைக் கொண்டு வரும் வாய்ப்புகளைப் பரிசீலிக்காமலே சட்டத்தில் அதற்கு இடமில்லை என்று அரசாங்கம் நிராகரிக்க முனைவது அபத்தமானது.
தமது அதிகாரங்களைப் பெருக்கிக் கொள்ளவதற்கு மாத்திரம் அரசியல் தலைமைகள் அரசியல் அமைப்பு சட்டத்தை வளைக்கும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்காக மாத்திரம் அதனை மாற்ற முனைவதில் என்ன தவறு இருந்துவிடப் போகிறது.
ஆனால் அரசியல் அமைப்பு சட்டத்தைக் காரணம் காட்டியும் உள்நாட்டு நீதித்துறைக்கு ஆற்றல் இருப்பதாகக் காரணம் காட்டியும் கலப்பு நீதிமன்ற விசாரணையை நிராகரிக்க முனைகிறது அரசாங்கம்.
உள்நாட்டு விசாரணைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப்பெற முடியும் என்ற நம்பிக்கை இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை.
குமாரபுரம் படுகொலைகள், ரவிராஜ் படுகொலை உள்ளிட்டவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கையின் நீதித்துறை எத்தகைய நீதியை வழங்கியிருக்கிறது.
இப்படியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களால் எவ்வாறு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்வி எழுகிறது.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரையுடன் உள்நாட்டு செயலணி ஒன்றும் கலப்பு விசாரணைக்கான பரிந்துரையை முன்வைத்துள்ள நிலையில் வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு கடுமையான அழுத்தங்கள் இருக்கும் என்றே நம்பப்படுகிறது.
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையைக் கூட இன்னமும் அமைக்காமல் இழுத்தடிக்கும் அரசாங்கத்துக்கு கலப்பு விசாரணைப் பொறிமுறைக்கான அழுத்தங்கள் மேலும் கொடுக்கப்படலாம்.
கலந்தாலோசனை செயலணியின் செயலரான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டது போல பந்து இப்போது அரசாங்கத்தின் கையில் உள்ளது.
கலப்பு விசாரணைப் பொறிமுறை என்ற பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு செயற்பட முனைந்தால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை மாத்திரமன்றி சர்வதேசத்தின் ஆதரவையும் அரசாங்கத்தினால் உறுதியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இல்லாவிட்டால் சர்வதேச ஆதரவு கிடைக்கிறதோ இல்லையோ பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் தொலைத்துவிட்டுத் தான் நிற்கும்.