நிறைவேற்றப்பட்ட வலுவற்ற தீர்மானத்திற்கு தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகளின் ஒற்றுமையற்ற தன்மையே காரணம் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் போன்ற ஈழத்தமிழர் முன்வைத்த பிரதான கோரிக்கைகளை நீக்கம் செய்து இந்தோ- பசுபிக் கடல்சார் மற்றும் பயங்கரவாதம் தொடர்பில் முன்னுரிமை அழித்து இலங்கையை காப்பாற்றியது ஐ.நா மனித உரிமைகள் பேரவையே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான இந்தப் பிரேரணை, பிரித்தானியா தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டது.
கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் சார்பாகவே அந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில், பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்தன. எதிராக11 நாடுகள் வாக்களித்தன. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டன.
உண்மையில் பொறுப்புக் கூறலை இலங்கை அரசிடமே கொடுக்கின்ற ஓர் வலுவற்ற தீர்மானமே இது.
13 ஆம் திருத்தச் சட்டமே தமிழருக்கு நிரந்தர அரசியல் தீர்வுக்கான ஒரே வழியென இந்தியா பல ஆண்டுகளாக கூறிவந்தது.
பிரித்தானியா தலைமையில் உறுப்பு நாடுகளினால் தயாரிக்கப்பட்ட தீர்மானத்திற்குள் இந்தியா புகுத்திவிட்டு பங்கேற்காமல் வெளிநடப்பு செய்திருக்கிறது.
13 ஆம் திருத்தச்சட்டம் என்பது ஈழத்தமிழர் அரசியல் விடுதலைக்குரிய ஏற்பாடுகளுக்கான ஆரம்பப் புள்ளியாகக்கூட அமையாதென்பது தமிழர் தரப்பால் சுட்டிக்காட்டி வந்த போதும்,
தமது அரசியல் முகவர்களை பயன்படுத்தி கடந்த பல ஆண்டுகளாக இந்தியா வாய்ப்பேச்சாக கூறி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.
இன்றைய கால கட்டத்தில் பன்னாட்டு அரங்கில் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வியாக இது இருந்தாலும், முன்னைய தீர்மானங்களை விட வலுவற்று வெறுமனே நீர்த்துப்போன ஓர் தீர்மானமாக இது வெளிப்படையாக சுட்டிக்காட்டி நிக்கின்றது.
இந்த தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மீண்டும் நசுக்கும் செயலாகும்.
இலங்கை அரசாங்கத்தின் உயர்நிலையில் இருப்பவர்கள் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டும் வகையில் ஐ.நாவின் மூன்று அறிக்கைகள் உள்ளன. (ஐ.நா வல்லுநர் குழு அறிக்கை, உள்ளக ஆய்வறிக்கை, பெட்ரிஅறிக்கை எனப்படும் இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளர் அலுவலக OISL அறிக்கை)
இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவும், உலகளாவிய மேலுரிமையினை இலங்கை தொடர்பில் அனைத்துலக சமூகம் செலுத்த வேண்டும் என ஐ.நா உயர்ஸ்தானிகர் மிசேல் பச்லேட் விடுத்த அழைப்பில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையில் 4 முன்னாள் ஆணையாளர்களும், இலங்கைக்குச் சென்றுவந்த 13 முன்னாள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களும், இலங்கை தொடர்பான ஐ.நா பொதுச் செயலரின் வல்லுநர் குழுவில் இடம்பெற்ற 3 உறுப்பினர்களும் இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பக்கோரியிருந்தார்கள்.
பாதிக்கப்பட்ட தமிழ் சமூகமும் கடந்த பல ஆண்டுகளாக இதைத்தான் கோரிவருகின்றனர்.
பெரும் அர்ப்பணிப்புகளால் நிறைந்த தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளுக்கான போராட்டக் களத்தின் வரலாறு மிக நீண்டது.
ஆனால், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான கடந்த 12 ஆண்டுகளில், தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளுக்கான களம் என்பது, அதிக தருணங்களில் தூரநோக்கற்ற, குறுகிய சிந்தனைகளால் நிறைக்கப்படுகின்றது.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்ற ஈழத் தமிழர்கள், அதிலிருந்து மீள்வது தொடர்பில், ஆக்கபூர்வமான ஒருங்கிணைந்த செயற்பாடுகளைப் பெரும்பாலும் முன்னெடுக்கவில்லை.
மாறாக, தங்களுக்கு இடையிலான போட்டி, பொறாமை, தனிப்பட்ட அரசியல் நலன், சுய தம்பட்டப் பேருவகை, போன்ற மனநிலையால் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த யதார்த்தம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் அரங்கேறி சிங்கள தேசத்தை தப்பிக்க செய்கின்றது.
கொழும்பில் பிரித்தானிய உயர்மட்ட பிரதிநிதிகளை இரகசியமாக சந்தித்த கூட்டமைப்பு உள்ளிட்ட சுமந்திரன் பிரித்தானியா தலைமையில் வெளியிட இருந்ந பூச்சிய வரைவுக்கு களம் அமைத்து கொடுத்துவிட்டு, எந்தப் பயனும் இல்லாத கடிதத்தை எழுதிவிட்டு பிரித்தானியா தலைமையில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு வாழ்த்து தெரிவித்தது யாபெரும் அறிந்ததே – என குறிப்பிடப்பட்டுள்ளது.