கடந்த 6 நாட்களுக்கு முன்னர் சூயஸ் கால்வாய் பகுதியில் சிக்கிய கப்பலை மீட்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வரும் நிலையில், தற்போது ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.
சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி வந்த சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயில் கடந்த ஆறு நாட்களாக சிக்கியுள்ளது.
மேலும், கப்பலை பயணப் பாதைக்கு திருப்ப தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
எனினும், இந்த ஒரு கப்பலால் மற்ற கப்பல்கள் நகர முடியாமல் தேங்கி நிற்கின்றன. இதனால், கோடிக்கணக்கான டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சூயஸ் கால்வாயில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் தேங்கி நெரிசல் ஏற்பட்டுள்ளதாக சேட்டிலைட் படங்கள் மூலம் தெரியவந்துள்ளன.
சூயஸ் கால்வாயின் தென் பகுதியில் மட்டும் 120க்கும் மேற்பட்ட கப்பல்கள் தேங்கி நிற்கின்றன. தடையாக நிற்கும் கப்பல் வழிவிட்டால் மட்டுமே இவை தொடர்ந்து நகர முடியும்.
இதனால், சில கப்பல்கள் கேப் ஆஃப் குட் ஹோப் மூலம் மாற்றும் வழியில் பயணிக்க திட்டமிட்டு வருகின்றன. ஆனால், அவ்வழியில் சென்றால் கூடுதலாக 15 நாட்கள் வரை ஆகுமாம்.
இதனிடையே, நேற்று ஆறாவது நாட்கள் மீட்பு பணியில் கப்பல் தரை தட்டிய இடத்தில் இருந்து 20 ஆயிரம் டன் மணல் அகற்றப்பட்டுள்ளது.
மேலும், 14 இழுவை கப்பல்கள் கொண்டு கப்பலை நகர்த்தும் முயற்சிகள் நடக்கின்றன. இப்பணிகளின் மூலமாக கப்பல் 30 டிகிரி கோணத்தில் லேசாக நகர்ந்துள்ளது.
இது நம்பிக்கை தரும் விஷயம் என்றாலும் கப்பல் எப்போது மீட்கப்படும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. கப்பலை மீட்கும் பணிக்காக நேற்று மேலும் 2 பிரமாண்ட இழுவை படகுகள் சூயஸ் நோக்கி விரைந்துள்ளன.
இதனால், எந்நேரத்திலும் கப்பல் கடலில் மிதக்க விடப்படலாம் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.
சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள இந்த எவர் கிவன் கப்பல், ஜப்பானை சேர்ந்த ஷோய் கிசென் நிறுவனத்துக்கு சொந்தமானது.
இந்த கப்பலில் உள்ள 25 பணியாளர்களும் இந்தியர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
மேலும், எகிப்து நாட்டை சேர்ந்த 2 மாலுமிகளும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக கப்பல் நிர்வாகம் கூறியுள்ளது.