மியான்மரில் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவருக்காக நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்விலும் புகுந்து, பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வணிக தலைநகர் Yangon-க்கு அருகிலுள்ள Bago-வில், சனிக்கிழமையன்று இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட 20 வயது மாணவர் Thae Maung Maung-ன் இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அந்த நேரத்தில், அப்பகுதிக்கு வந்த பாதுகாப்பு படையினர், துக்கம் அனுசரிக்க வந்த மக்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். கூடியிருந்த மக்கள் அனைவரும் தலைதெறிக்க ஓடியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில், எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.
ஆனால், வெவேறு இடங்களில் மேலும் 12 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கடந்த பிப்ரவரி 1 ஆட்சிக் கவிழ்ப்பு முதல் இதுவரை குறைந்தது 459 பொதுமக்கள் மியான்மரின் இராணுவப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை மியானமாரின் ஆயுதப்படை தினத்தன்று மட்டும் 114 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஆறு பேர் 10 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை இந்த இராணுவத்துக்கு எதிரான புரட்சிக்கு துவக்கமாக இருந்த இணைப் போராளிகள் இருக்கும் எல்லைப் பகுதியில், மியான்மர் இராணுவ படையினர் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் தாய்லாந்து எல்லைப் பகுதிக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.சொந்த மாக்களையே படுகொலை செய்துவரும் மியான்மர் இராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிராக பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.