ஜெனிவா விவகாரத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என நான் ஒருபோதும் கூறவே இல்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், நான் தெரிவித்த கருத்து தவறாக விளங்கி கொள்ளப்பட்டுவிட்டது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தியா எங்களுக்கு ஆதரவளிக்கும் என நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. நான் சொன்னமை தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. நான் இந்தியப் பிரதமரின் வார்த்தைகளையே எதிரொலித்தேன்.
அவர் இந்தியா இலங்கைக்கு எந்த அநீதியும் இழைக்காது என குறிப்பிட்டிருந்தார். நான் அந்த வார்த்தைகளையே பயன்படுத்தினேன் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் சிங்கள மொழிபெயர்ப்பின்போது ஒரு பத்திரிகையாளர், நான் இந்தியா ஆதரவளிக்கும் எனத் தெரிவித்தேன் எனக் கருதிவிட்டார்.
அது இலங்கையில் தலைப்புச்செய்தியாக மாறிவிட்டது. இந்திய ஊடகங்களும் அதனை செய்தியாக்கின என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு கடந்த 23ம் திகதி இடம்பெற்றிருந்தது.
இதில் தீர்மானம்திற்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்ததுடன், 14 நாடுகள் நடுநிலை வகித்தன.
இந்தியாவும், குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.