இலங்கையில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமை முழுமையாக மறுக்கப்பட்டதனால் இலங்கை நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது என இலங்கை தொடர்பான விசரணையில் ஐ.நா. நிபுணர் குழுவின் சார்பில் நியமிக்கப் பட்ட உறுப்பினரும் , தென் ஆபிரிக்காவைத் தளமாக கொண்ட ஒரு முன்னணி இடைக்கால நீதிக்கான நிபுணருமான ஜஸ்மின் சூக்கா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நீதியையும் பொறுப்புக் கூறலையும் அடைவதற்கு மோசமான மனித உரிமைகள் மீறல்கள் புரியப்பட்டுள்ளன என்பதற்கான சாட்சியங்கள் அவசியம். மனித உரிமைகளின் நிலைமை பற்றிய ஐ.நா.வின் அறிக்கைகள் தொடர்பில் குறிப்பாக சர்வதேச சமூகம் மற்றும் உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுப்பதற்கு மிகவும் முக்கியமானவை.
மனித உரிமைகள் உயர் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் மற்றும் அவரது அலுவலகத்தினால் அண்மையில் வௌியிடப்பட்ட அறிக்கையானது தீர்மானம் 30/1 இன் கீழ் இலங்கை அரசாங்கம் தனது கூட்டு ஈடுபாட்டினை நடைமுறைப்படுத்த தவறியமைக்கான ஆதாரமாக அமைந்துள்ளது. அத்துடன் இராணுவ மயமாக்கல் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்தின் பின்னடைவு பற்றிய கரிசனைகளையும் எழச் செய்கின்றது. இது மிகவும் முக்கியமானது.
ஏனெனில் இந்த அறிக்கை இல்லாவிட்டால் ஜெனிவா அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரத்தை பேசுபொருளாக்க ஒரு சிறிய சந்தர்ப்பமே இருக்கும்.
ஆனால் இப்போது பச்லெட் அம்மையார், ஜெனிவாவின் மனித உரிமைகள் சபையிலுள்ள உறுப்பினர்களுக்கு பொறுப்புக்கூறலை தொடர்வதற்கு பல்வேறு வகையான பொறிமுறைகளை வழங்கியுள்ளார்.
இறுதிப் போரில் புரியப்பட்ட போர்க் குற்றங்களுக்கு போதிய பொறுப்புக்கூறல் இல்லாமை குறித்து முற்றிலுமான விரக்தியையும் வலியினையும் உங்களுடைய வினாவில் நான் உணரமுடிகிறது.
மக்கள் அனுபவித்துள்ள கொடுமைகளுக்கு முற்றிலுமான தண்டனையிலிருந்து பாதுகாப்பு இருந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இலங்கையில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமை கூட மறுக்கப்பட்டதனால் இலங்கை நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், இறுதியுத்தத்தில் உயிரிழந்தோரை நினைவேந்த அமைக்கப்பட்ட நினைத்தூபி இடிக்கப்பட்ட போது நாங்கள் அதைக் கண்டோம்.
மேலும் தங்கள் உறவுகளின் நிலையை அறிய பாதுகாப்பு படையினரை அழைத்து விசாரணை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாமையால், காணாமற்போனவர்களுக்கான அலுவலகத்தின் மீது காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் நம்பிக்கை இழந்திருப்பதையும் நாங்கள் பார்க்கின்றோம்.
அதேவேளையில், நீதிக்கான தமிழர்களின் தாகம் இன்னும் தீரவில்லை என உறுதியாக கூறுகிறேன். தமிழர்கள் தற்போதைய சூழ்நிலையுடன் போராடும் அதேவேளையில் உலகம் முழுவதும் எம்மைப் போன்ற சிறு குழுக்களும் தனிநபர்களும் ஆதாரங்களை ஆவணப்படுத்தி சேகரித்து, எதிர்காலத்துக்காக அவற்றைப் பாதுகாத்தும் வருகின்றோம்.
இது ஒரு காப்புறுதித் திட்டம் போன்றது என்பதால் தற்போது இடம்பெறும் மீறல்களை தொடர்ந்தும் ஆவணப்படுத்துவதுடன் கடந்த காலத்தில் இடம்பெற்ற மீறல்களுக்கான ஆதாரங்களைச் சேகரித்து பாதுகாப்பதும் மிகவும் முக்கியமானதாகும்.
பல நாடுகளில், மிகப்பெரும் அக்கிரமங்கள் இடம்பெற்ற பின்னர் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைப் பெற்றுக் கொள்வதற்கு நீண்ட காலம் எடுக்கின்றது, ஆனால் நாங்கள் சிறிது சிறிதாக தொடர்ந்தும் முயற்சி செய்வது அவசியம் ஐவுதுீ ஆனாது இலத்தீன் அமெரிக்கா மற்றும் கலிபோர்னியாவில் நீதிமன்ற வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறது.
அத்துடன் நாங்கள் ஐ.நா அமைதிகாப்பு பணியில் இலங்கை தொடர்ந்தம் பங்கெடுப்பது பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளோம். இந்த அறிக்கைகள் யாவும் உபயோகமற்ற காகிதத் துண்டுகள் போல இருக்கலாம். ஆனால் அவைதான் எதிர்காலத்தில் பொறுப்புக்கூறலைக் கட்டியெழுப்பவதற்கான அடித்தளமாக உண்மையில் இருக்கப் போகின்றன.
எதிர்காலத்தில் எந்தவொரு நீதிமன்ற வழக்கு அல்லது தடை விண்ணப்பமோ போன்றவற்றை நடைமுறைக்கு கொண்டுவர, குற்றங்களை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம் அவசியமாகும்.
பச்லெட்டின் அறிக்கையானது ஐ.நா அமைதிகாப்பு பணியில் ஈடுபடும் இலங்கைப் படையினரை அதற்குரிய பொறிமுறைகளின் படி ஆய்வுக்குட்படுத்தல் மற்றும் அமைதிகாப்பு பணியில் பயன்படுத்தல் பற்றிய பிரச்சினையும் எழுப்புகின்றது. அவருடைய கருத்துக்கள் பொறுப்புக்கூறலை அடைவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகின்றன.