தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் அனைத்து தொகுதிகளிலும் பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்திலும் 5 சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனியாக பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பறக்கும் படையினர் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு ெபாருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாளையங்கோட்டை சட்டசபை தொகுதிக்கான பறக்கும் படை நிலைக்குழுவினர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லட்சுமி தலைமையில் நேற்று பாளையங்ேகாட்டை டக்கரம்மாள்புரம் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ரூ.12 கோடியே 89 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.
உடனே, பறக்கும் படையினர் அதுதொடர்பான ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இருந்தன. இருப்பினும் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை கொண்டு வந்ததால் இதுகுறித்து வருமானவரி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே, வருமானவரி அதிகாரி பாலையா தலைமையில் அதிகாரிகள் விரைந்து வந்து வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள், மதுரையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு வழங்குவதற்காக நகைகளை கொண்டு செல்வதாகவும், அதற்கு முறையான ஆவணங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் அந்த நகைகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது சரிவர கணக்கிட முடியாததால் அந்த நகைகளோடு வேனை பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு தாசில்தார் செல்வன் மற்றும் பாளையங்கோட்டை சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான கண்ணன் ஆகியோர் அந்த நகைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வருமான வரித்துறையினர் அந்த நகைகளை ஒவ்வொன்றாக பார்த்து மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆவணங்கள் முறையாக இருக்கும் பட்சத்தில் நகைகளை திரும்ப ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.