மருத்துவமனையில் நோயாளிகள் இருக்கும் அறைக்குள் செல்போன் கொண்டு செல்ல வேண்டாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதியில் நடந்த அறிவியல் மாநாட்டில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், நோய்களை பரப்பக்கூடிய பாக்டீரியாக்களும், வைரஸ்களும் செல்போனில் அதிக அளவில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முறையாக கைகளை சுத்தம் செய்யாமல் செல்போன் பயன்படுத்தும்போது, கைகள் மற்றும் செல்போனில் உள்ள பாக்டீரியாக்கள் இணைந்து நோய் கிருமிகளை பரப்புகின்றன எனவும், மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தும் செல்போன் கீபோர்டுகளில் இருந்து மட்டும் சுமார் 100 பாக்டீரியா குழுக்களின் மாதிரிகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன்களில் இருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள், ஆண்டிபயாடிக் மருந்துகளின் மீது கிருமியை உருவாக்கும் திறன் உடையவை என்பதால், அவை நோயாளிகளை கடுமையாக பாதிக்கும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.