காஃபி குடிக்க வேண்டாம் என்று சொன்னால் சொத்தையே கேட்டது போல் ஒரு க்ரூப் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறது. காஃபி குடித்தால் புத்துணர்வு கிடைக்கும், புற்று நோய் வராது, வளர்சிதை மாற்றம் நன்றாக நடக்கும் என காஃபி பற்றி பல நன்மைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இந்த ஆராய்ச்சியாளர்கள் இதன் நன்மை, தீமை இரண்டுமேதான் கூறியிருக்கிறார்கள். ஏதாவது ஒரு சமயத்தில் அதன் நன்மைகளைப் பற்றி சொல்லும்போது, அதை மட்டுமே நாம் கெட்டியாக பிடித்துக் கொண்டு தீமைகளை காற்றில் பறக்க விடுகிறோம். காஃபியை நீங்கள் எப்போதெல்லாம் குடிக்க விரும்புவீர்கள்? காலை எழுந்தவுடன், டென்ஷனாக இருக்கும்போது, தூக்கம் வரும்போது, இந்த சமயங்களில் நீங்கள் காஃபி குடிக்கக் கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
சூடான காஃபி குடிக்கும்போது: சிலர் மிகச் சூடாக காஃபி குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்வார்கள். அடுப்பிலிருந்து நேராக அவர்கள் கையில் தர வேண்டும். இது முழுவதும் ஆபத்து. காரணம் புதிய ஆய்வில் மிகச் சூடாக காஃபி குடிப்பதால் உணவுப்பாதையில் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன என தெரிய வந்துள்ளது. ஆகவே காஃபி போட்டதும் பொறுக்கும் சூட்டில் அதாவது 145- 175 ஃபாரன்ஹீட்டில் இருந்தால் போதுமானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
காலையில் எழும்போது: சிலர் காலையில் எழுந்ததும் காஃபி குடித்தால் தாங்கள் மிகவும் புத்துணர்வாகவும் இருப்பதாக நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. தூங்கி எழும்போது உங்கள் ஸ்ட்ரெஸ் ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும். இது இயற்கையாக உங்களுக்கு புத்துணர்வு தரும். ஆகவே அந்த சமயத்தில் குடிப்பதை விட காஃபி குடிக்க சிறந்த தருணம் காலை 10- 12 மணி வரைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
டென்ஷனாக இருக்கும் போது: சிலர் டென்ஷனாக இருந்தால் உடனே காஃபி போட்டு குடிப்பார்கள். இதனால் தாங்கள் புத்துணர்வு பெற்றதாக நினைப்பார்கள். ஆனால் டென்ஷனான சமயத்தில் காஃபி குடிப்பவரகளுக்கு தூக்கமின்மை வியாதியும், ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிக அளவு சுரக்கக் காரணமாகிறது எனவும் தெரிய வந்துள்ளது.
தூக்கம் வரும்போது: சிலர் தூக்கத்தை தள்ளிபோட காஃபியை குடிப்பார்கள். உங்களுக்கு தெரியுமா உங்கள் சராசரி தூக்க விகிதத்தையும் சேர்த்து காஃபின் குறைக்கிறது. காரணம் உங்களுக்கு தூக்கம் வரும்போது நமது மூளை நமக்கு சமிக்ஞை தரும். தூக்கம் போதவில்லை எல அலாரம் தரும். அந்த விழிப்புணர்வை காஃபின் குறைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் உங்களின் தூக்கம் பாதித்து பிரச்சனைகளைத் தரும்.