யாழ் மாநகரசபை உறுப்பினராகத் தாம் நீடிக்கின்றமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டவழக்கில் நீதிமன்றத்தின் முடிவு மேயர் மணிவண்ணனுக்குச் சார்பானதாக இன்று வெளியானமையால் அவரின் மேயர் பதவிக்கு இருந்த ஆபத்து தற்காலிகமாகத் தள்ளிப் போய்விட்டது.
மேயர் பதவியில் மணிவண்ணன் நீடிக்கலாம் வழக்குக் கண்டம் தள்ளிப்போனது, மாநகர சபை உறுப்பினர் மயூரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோரை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநிறுத்தியமைக்கு எதிராக மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையை நீக்கக்கோரி மாகாண குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்
செய்யப்பட்ட இரு வழக்குகளும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன.
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட ஆறு பேரைக் கட்சியி இருந்து நீக்கிய விடயம் தொடர்பில் குடியியல் மேன்முறையீட்டு மாகாண நீதிமன்றின் தீர்ப்பு இன்று 31ஆம் திகதி வழங்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின்) மாநகர சபை உறுப்பினரான வி.மணிவண்ணன் உட்பட ஆறுபேரை ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கியதான அறிவித்தலை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
அவ்வாறு கிடைத்த கடிதத்திற்கு அமைய 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டோர் உறுப்புரிமை இழந்தமை தொடர்பான அரச இதழ் பிரசுரிக்கப்படும் என தெரிவத்தாட்சி அலுவலர் மணிவண்ணன், மயூரன் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்களிற்கும் அறிவுறுத்தல் அனுப்பி வைத்தார்.
தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் இப்படி கடிதம் அனுப்பிய ஆறு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் மணிவண்ணன், மயூரன் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்கள். மற்றைய இருவர் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்கள்.
இந்த ஆறு உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் தெரிவத்தாட்சி அலுவலரின் இந்த முடிவிற்கு இடைக்காலத் தடைகோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தபோது மாவட்ட நீதிமன்றம் இந்த ஆறு உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து நீக்கும் முடிவிற்கு இடைக்காலத் தடை விதித்தது.
மாவட்ட நீதிமன்றம் விதித்த இடைக் காலத் தடைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் குடியியல் மேன்முறையீட்டு மாகாண நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களில் மயூரன் மற்றும் வி.மணிவண்ணனிற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவுற்று வழக்கின் தீர்ப்பு இன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
நீதிபதிகளான ஏ.எச்.எம்.மனாப் மற்றும் சசி மகேந்திரன் ஆகியோரினால் இன்று முற்பகல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்போதே இரு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.