திருப்பூரில் கழுத்தை நெரித்து பெண் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவர் மற்றும் கள்ளக்காதலனை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 35). இவருடைய மனைவி அனுசியா (25). இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
மகேந்திரன், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த பாப்பன்ன செட்டியார் வீதியில் வசித்து வந்தார். மேலும் அவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 24-ந் தேதி குழந்தையுடன் அனுசியா திடீரென்று மாயமானார். இது குறித்து மகேந்திரன் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அனுசியா மற்றும் குழந்தையை தேடி வந்தனர்.
அப்போது 15 வேலம்பாளையத்தை சேர்ந்த கள்ளக்காதலன் சதீஸ்குமாருடன், அனுசியா தனது குழந்தையுடன் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையுடன் அனுசியாவை மீட்டு வந்த போலீசார், அறிவுரை கூறி கணவர் மகேந்திரனுடன் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அனுசியா தனது கணவருடன் 15 வேலம்பாளையம் அம்மையப்பன்நகரில் உள்ள தனது தோழி சுதா வீட்டிற்கு குழந்தையுடன் சென்றார். அப்போது சுதா அவர்கள் 2 பேரையும் சமாதான படுத்த முயற்சி மேற்கொண்டார். ஆனால் தோழியின் பேச்சை கேட்காமல் எங்களது பிரச்சினையை நாங்கள்பேசி தீர்த்துக்கொள்கிறோம்.
எனவே குழந்தையுடன் வெளியில் காத்திருக்குமாறு கூறினார். இதையடுத்து சுதா, அனுசியாவின் குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு அனுசியா அலறும் சத்தம் கேட்டு, சுதா உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு அனுசியா கழுத்தில் துப்பட்டாவால் நெரிக்கப்பட்டு, மயங்கிய நிலையில் கீழே கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக 15 வேலம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அனுசியா இறந்தார்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் 15 வேலம்பாளையம் போலீசார் விரைந்து சென்று அனுசியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சுதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்குபதிவு அனுசியாவின் கணவர் மகேந்திரன், கள்ளக்காதலன் சதீஸ்குமார் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
விசாரணையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் துப்பட்டாவால் அனுசியாவை கழுத்தை நெரித்து அவருடைய கணவர் கொன்று இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.