வெளிநாட்டவர்களுக்கு உரிமைகளை வழங்க சுவிஸ் நாட்டவர்கள் விரும்புகிறார்களா? சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று இந்த கேள்விக்கான பதிலைக் கொடுத்துள்ளது.
பெரும்பாலான சுவிஸ் நாட்டவர்கள் (52 சதவிகிதத்தினர்), வெளிநாட்டவர்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்கவேண்டும் என அந்த ஆய்வில் தெரிவித்துள்ளார்கள்.
குறிப்பாக, மாகாண அளவிலான தேர்தல்களில் கூட வெளிநாட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்றும், அப்படி செய்வது, வெளிநாட்டவர்கள் சுவிஸ் மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ உதவிசெய்யும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். இந்த எண்ணம், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்தும் உள்ளது.
இதுபோக, 59 சதவிகித சுவிஸ் நாட்டவர்கள், சுவிட்சர்லாந்தில் பிறக்கும் அனைவருக்கும் தானாகவே சுவிஸ் குடியுரிமை வழங்கப்படவேண்டும் என்றும், 69 சதவிகிதத்தினர், 5 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்களை, தங்கள் குடும்பத்தினரை அவர்களுடன் வாழ அழைத்துக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், சுவிட்சர்லாந்தில் பணி செய்வது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, 27 சதவிகிதம் பேர் மட்டும், நம் நாட்டில் வேலை வாய்ப்பு குறைவு என்றும், 5 ஆண்டுகளுக்கு குறைவாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தவர்களை அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பவேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், அப்படி கூறுபவர்களின் எண்ணிக்கையும், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.