நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற கோரவிபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் பலியானதாகவும், ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.
நுவரெலியாவிலிருந்து எல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னால் பயணித்த கனரக வாகனம் ஒன்றின் தடுப்புத் தொகுதி செயற்படாமல் போனதால், முச்சக்கரவண்டியின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நுவரெலியா பொலிசார் தொிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அதன் சாரதி காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அண்மையில் பசறையில் இடம்பெற்ற கோரவிபத்தில் பதின் நான்குபேர் பலியாகியிருந்த நிலையில் மீண்டும் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.