இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளும் பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டி ஏற்கனவே டிராவில் முடிந்தது.
இதை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்திருந்தது.’
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 354 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால் 4 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
அவ்வணி சார்பாக பிரத்வெய்ட் அதிகபட்சமாக 85 ரன்களை பெற்றுக் கொண்டார்.
இலங்கை அணிக்கு 377 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படவே இலங்கை அணி 5 ஆவதும் இறுதியுமான ஆட்ட நேரம் நிறைவடையும் போது 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 193 ரன்களை பெற்றிருந்தது.
இலங்கை அணி சார்பில் ஓசத பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 66 ரன்களையும் திமுத் கருணாரத்ன 75 ரன்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
அதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி டிராவில் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்ட நாயகனாக பிரத்வெய்ட்டும் தொடர் நாயகனாக சுரங்க லக்மாலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.