அரசாங்கதத்திற்கு எதிராக மாற்று அணியொன்றை உருவாக்குவது குறித்து தேசிய அரசியலில் திரைக்கு பின்னால் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிரேஷ்ட அரசியல்தலைவர்களை பின்னணியாக கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மாற்று அரசியல் அணியொன்றை உருவாக்குவது குறித்து பல தரப்புகளுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணிக் விக்கிரமசிங்க, முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பல முக்கிய அரசியல் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை கடந்த பல வாரங்களாக முன்னெடுத்திருந்ததுடன் கடந்த திங்கட்கிழமை மற்றும் புதன் ஆகிய நாட்களில் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பிற்கான ஒழுங்குகளை ஐ.தே.கவின் தவிசாளர் வஜிர அபேவர்தன முன்னெடுத்திருந்தார்.
மாற்று அரசியல் சக்தியை உருவாக்கும் செயற்பாட்டில் பல சிரேஸ்ட அரசியல் தலைவர்களும் செயற்பட்டு வருகின்றனர். இந்த கூட்டணியானது ரணில் விக்கிரமசிங்கவையும் உள்வாங்கும் வகையில் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.
அதனொரு முக்கிய மைல் கல்லாகவே கடந்த திங்கட்கிழமை (மார்ச் மாதம் 29ஆம் திகதி) ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு காலை 5.30 மணியளவில் தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் மேலும் சில சிரேஸ்ட அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு குறித்து அறிவித்தார்.
ஏற்கனவே குறித்த சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பல காரணிகளின் அடிப்படையில் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் கட்டாயமாக சந்திப்பை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்வதற்கான அனுமதிக்காகவே வஜிர அபேவர்தன தொடர்புக்கொண்டிருந்தார்.
இதன் பிரகாரம் அன்றைய தினம் மாலை திட்டமிடப்பட்டப்படி சந்திப்பு இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் சிரேஸ்ட அரசியல் தலைவர்களும் ரணில் விக்கிரமசிங்கவுடனான அந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்தனர்.
அராங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளும் போக்குகளும் நாட்டை விரைவில் பாதாளத்தில் தள்ளிவிடும் .
பொது மக்கள் விரக்தி நிலை மற்றும் நாட்டின் பல்துறைசார் பின்னடைவுகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. பிரிந்து செயற்படுவதால் எவ்வித பலனும் ஏற்பட போவதில்லை. மாறாக மீண்டும் ஒன்றிணைந்து செயற்படுவதனால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ஐக்கிய மக்கள் சார்பில் கலந்துக் கொண்டவர்கள் குறிப்பிட்டனர்.
பொதுத்தேர்தலுக்கு முன்னதாகவே இந்த விடயத்தை நான் குறிப்பிட்டேன். ஆனால் நான் அன்று கூறியதை யாரும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. நம்பவும் இல்லை. நெல் குருவியின் கதையே நினைவுக்கு வருகின்றது.
நெல்லை உண்ண சென்ற குருவிகள் வேடன் விரித்த வலையில் சிக்கிக்கொண்டன. வலையிலிருந்து தப்பிக்க தனித்தனியாக போராடிய குருவிகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பின்னர் அனைத்து குருவிகளும் ஒன்றிணைந்து முயற்சித்தன. இதன் போது குருவிகளால் வலையை தூக்கிக்கொண்டே தப்பித்து பரந்து செல்ல முடிந்தது.
அதுபோல தான் நாம் இன்று வேடனின் வலையில் சிறைப்பட்டுள்ளோம். தப்பிப்பதாயின் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிக்க வேண்டும்.
எனவே அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் உள்ளேன்.
இரு தரப்பும் ஒன்றிணைந்து இளையவர்களை முன்னணியாக கொண்டு வலிமையாக செயற்பட்டால் மாற்றத்தை உருவாக்க முடியும் என இதன் போது ரணில் விக்கிரமசிங்க சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த மற்றைய தரப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரானதொரு அணியை உருவாக்க வேண்டுமாயின் நிச்சயம் ரணில் விக்கிரமசிங்கவின் வழிக்காட்டல் அவசியம் என்பதை வலியுறுத்திய அந்த தரப்பினர் அடுத்த கட்ட ஏற்பாடுகளுக்கான அனுமதியுடன் அங்கிருந்து சென்றனர்.