பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பயணத்தில் உறுதியாக உள்ளோம் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சவால்களை சந்திக்க தயாரின்றி ஆட்சியை விட்டு ஓடியவர்களின் ‘ஆட்சியை கவிழ்ப்போம்’ என்ற வெட்டிப்பேச்சுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவியேற்று நேற்றுடன் இரு வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு, அதன் பிரதான நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”இந்த இரண்டு வருடங்களில் நாம் என்ன செய்தோம் எனக் கேட்கின்றனர். கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கு – தெற்கு பிரச்சினையை காட்டிலும் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பாரிய பிரச்சினைகள் காணப்பட்டன. ஜனநாயகம், ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் போன்றவை தொடர்பில் பல அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. கடந்த இரு வருட காலத்தில் இவற்றில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளோம். ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்படவுமில்லை, நாட்டை விட்டு வெளியேறவும் இல்லை.
எம்மை நோக்கி விரல் நீட்டுபவர்கள் ஒரு விடயத்தை நினைத்துப் பாருங்கள். நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் 18ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளோம். 19ஆவது சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதை விட 18ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டதே எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
கடந்த ஆட்சியாளர்கள், சர்வதேச அழுத்தம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியாமல் முன்கூட்டியே தேர்தலை நடத்தி ஆட்சியை விட்டு தப்பிச்சென்றனர். ஆனால் நாம், சகல சவால்களுக்கும் முகங்கொடுத்து ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்துள்ளோம்.
நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட இடமளிக்க மாட்டோம். அதற்காக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாரிய முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதோடு, நாட்டின் ஒருமைப்பாட்டை கட்டிக்காக்க புதிய அரசமைப்புக்கான வேலைகளையும் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.
எனினும், புதிய அரசமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்துவதாகவும் பௌத்த மதத்தின் முன்னுரிமையை இல்லாது செய்வதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இவற்றை நாம் நிராகரிக்கின்றோம். நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பி சமமான அபிவிருத்தியை ஏற்படுத்தவே புதிய அரசமைப்பை உருவாக்குகின்றோம். ஆகவே நாட்டின் அபிவிருத்திக்கான இந்த ஆரம்பத்தில் எம்முடன் இணைந்து பணியாற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்” என்றார்.