போக்குவரத்து பொலிஸ் அதிகாரியால் மஹரகம வீதியில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட சாரதியான இளைஞர் தனது மோசமான அனுபவத்தைப் பற்றி தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் கலைமகன் பிரவீன் என்ற தமிழ் இளைஞரே தாக்குதலுக்கு இலக்கானவராவார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 29ஆம் திகதி பண்டாரவளையிலிருந்து கொழும்புக்கு வரும் போதே இந்த சம்பவம் நடந்தது.
இதன்போது மஹரகம போக்குவரத்து சமிக்ஞையில் லொறியை நிறுத்தியிருந்தேன். அப்போது எனக்கு நித்திரை வந்து விட்டது. உறங்கி விட்டேன்.
எனக்கே தெரியாமல் லொறி முன் சென்றுவிட்டது. ஆனாலும் எனக்கு சட்டென்று நிதானம் வந்த போது எனது லொறிக்கு முன்னால் யாரோ இருப்பது தெரிந்தவுடன் விபத்தை தவிர்ப்பதற்காக லொறியை திருப்பினேன்.
அப்போதுதான் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எனது லொறியின் கண்ணாடி பட்டது. அவரை மோதவில்லை. கண்ணாடி மட்டுமே பட்டது.
உடனே நான் லொறியை நிறுத்திவிட்டேன். எனினும் அப்போது மற்றுமொரு பொலிஸ் அதிகாரி வந்தார். என்னை அடித்து வெளியே இழுத்தார்.
நான் வாகனத்தின் பட்டியை கூட கழற்றவில்லை. அவர் என்னை அடித்து இழுத்த பிறகே பட்டிகை கழற்றினேன்.
எதுவும் கேட்டவில்லை. விசாரிக்கவும் இல்லை. உடனே அடிக்க ஆரம்பித்துவிட்டார்.
எனது வாகனத்தில் அடிபட்ட அதிகாரியை உடனே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் அவருக்கு எதுவும் ஆகவில்லை.
அந்த இடத்தில் யாரென்றே தெரியாத ஒருவரும் வந்து என்னை தாக்கினார். பின்னர் பொலிஸ் அதிகாரி அவரது காலால் எனது காலை மடக்கி கீழே போட்டு, என் மீது ஏறி குதித்தார்.
பின்னர் என்னை வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று சிறுநீர் மற்றும் இரத்த பரிசோதனை செய்தார்கள். எனக்கு அடிப்பட்டது என்று கூறியும் வைத்தியர்கள் அதை கவனிக்கவில்லை.
அடிக்கும் போது பொலிஸ் அதிகாரி “தெமழோ (தமிழன்)” எனவும் தகாத வார்த்தைகளையும் பிரயோகித்து ஏசியதாக அவர் தெரிவித்தார்.