இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டம் போட்டுள்ளீர்களா? என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காக ஒரு அற்புதமான ரெசிபியை தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. அது தான் பட்டாணி குழம்பு. இந்த பட்டாணி குழம்பு சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமான சுவையுடன் இருக்கும்.
உங்களுக்கு பட்டாணி குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டாணி குழம்பு ரெசிபியின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உலர்ந்த மஞ்சள் பட்டாணி – 1 கப்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* சாம்பார் பவுடர் – 2 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
* தண்ணீர் – 1 கப் + தேவையான அளவு
* உப்பு – சுவைக்கேற்ப
அரைப்பதற்கு…
* வெங்காயம் – 2 (நறுக்கியது)
* தக்காளி – 3 (நறுக்கியது)
* பூண்டு – 3 பல்
* இஞ்சி – 1/2 இன்ச்
* சோம்பு – 1 டீஸ்பூன்
* மிளகு – 1/2 டீஸ்பூன்
* கிராம்பு – 1
* பட்டை – 1/2 இன்ச்
* ஏலக்காய் – 1
* தேங்காய் – 1/4 கப் (துருவியது)
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 1
* கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
* முதலில் இரவு தூங்கும் முன் உலர்ந்த மஞ்சள் பட்டாணியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சிறிது சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுதை சேர்த்து, ஒரு கப் நீர் ஊற்றி கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் சாம்பார் பவுடர் சேர்த்து நன்கு கிளறி, 15 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இப்போது வேக வைத்துள்ள பட்டாணியை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து ஒருமுறை கிளறிவிட்டு, 2 நிமிடம் குழம்பு ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியில் கரண்டியால் பட்டாணியை நசுக்கி விட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பட்டாணி குழம்பு தயார்.
குறிப்பு:
* பட்டாணியை மென்மையாகும் அளவில் தான் வேக வைக்க வேண்டும்.
* உங்களிடம் சாம்பார் பவுடர் இல்லாவிட்டால், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
* உலர்ந்த மஞ்சள் பட்டாணிக்கு பதிலாக உலர்ந்த பச்சை பட்டாணியை அல்லது பிரஷ்ஷான பட்டாணி அல்லது சன்னா கூட பயன்படுத்தலாம்.