ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு அபூர்வ இரத்தக்கட்டிகள் உருவாகும் பிரச்சினை தொடர்கிறது.
எதனால் அந்த கட்டிகள் உருவாகின்றன என்பதற்கான முழுமையான பதில் இதுவரை கிடைக்கவில்லை.
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு உருவாகும் இந்த கட்டிகள், அபூர்வ வகைக் கட்டிகளாகும்.
அதாவது, ஒருவருக்கு இரத்தத்தில் கட்டிகள் உருவாகின்றன என்றால், அவருக்கு platelets என்னும் இரத்தம் உறைவதற்கு உதவும் இரத்தத் தட்டுகள் அதிகமாக இருக்கும்.
அவை குறைவாக இருந்தால் இரத்தம் உறைவது தாமதமாகும். ஆகவே, ஒருவருக்கு இரத்தத்தில் கட்டிகள் இருந்தால், அவருக்கு இரத்தத்தட்டுகள் அதிகம் இருக்கும், ஆகவே அவருக்கு இரத்தம் உறைவதில் பிரச்சினை ஏற்படாது.
ஆனால், இந்த ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொள்வோரில் சிலருக்கு, இரத்தக்கட்டிகளும் உருவாகின்றன, அதே நேரத்தில் இரத்தம் உறைவதிலும் அவர்களுக்கு பிரச்சினை உள்ளது.
அதுவும் இந்த இரத்தக்கட்டிகள் பெரும்பாலும் மூளையிலும், சிலருக்கு குடலிலும் காணப்படுகின்றன.
மார்ச் மாதத்தின் மையப்பகுதியில், ஜேர்மனியின் மருந்துகள் உழுங்குமுறை அமைப்பான Paul Ehrlich நிறுவனம், முதன்முதலில் இளம் வயதுடைய மற்றும் நடுத்தர வயதுடைய பெண்களில் இந்த இரத்தக்கட்டிகள் உருவாவது குறித்து எச்சரித்தது.
ஆனால், எதனால் இந்த ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் உடலில் இந்த கட்டிகள் உருவாகின்றன என்பதை இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. மார்ச் 31 நிலவரப்படி, உலகில் இதுவரை 62 பேருக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அதில் 44 பேர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். அந்த 44 பேரில், 14 பேர் உயிரிழந்துவிட்டார்கள். ஜேர்மனியில் 31 பேருக்கு இந்த கட்டிகள் ஏற்பட்டுள்ளன, அவர்களில் 19 பேருக்கு கட்டிகளுடன், plateletகள் குறைபாடும் உள்ளது, 9 பேர் உயிரிழந்துள்ளார்கள். இரத்தக்கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 65 வயதுக்கு கீழுள்ளவர்கள்.
அதிலும் பெரும்பாலானோர் பெண்கள், பெண்களுக்கு அதிகம் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை கொடுக்கப்பட்டதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. முதலில் இரத்தக்கட்டிகள் உருவாகும் பிரச்சினையைத் தொடர்ந்து, சில நாடுகள் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்படுத்துவதை நிறுத்தியிருந்தன.
தற்போது பல நாடுகள் அந்த தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்திவிட்டன. ஜேர்மனி, 60 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போடுவதை நிறுத்த சென்ற வாரம் முடிவு செய்தது.
இப்போதைக்கு எதனால் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெறுவோருக்கு இந்த பிரச்சினை ஏற்படுகிறது என்ற கேள்விக்கு பதிலில்லை.
ஆனால், ஹெப்பாரினால் தூண்டப்பட்ட இரத்தக்கட்டிகள் போல் இந்த கட்டிகள் இருப்பதாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.
ஹெப்பாரின் என்பது இதய பிரச்சினை உள்ள சிலருக்கு, இரத்தம் உறைவதைத் தடுப்பதற்காக கொடுக்கப்படும் ஒரு ரசாயனம் ஆகும்.
சிலருக்கு இந்த ஹெப்பாரின் உடலில் செலுத்தப்படும்போது, அபூர்வமாக, ஆனால் ஆபத்தை ஏற்படுத்தும் அளவில் கட்டிகள் உருவாகுவதுண்டு.
அதுவும், ஊசி போடும்போது, தசையில் ஊசி குத்தப்படுவதற்கு பதில், தவறுதலாக இரத்தக்குழாயில் ஊசி குத்தப்பட்டால் உடல் இதுபோன்ற ஒரு எதிர்வினையைக் கொடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.