இலங்கையில் அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளராக இருந்து, தமிழர் தாயகத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்ட சித்தங்கேணியை சேர்ந்த வே.சிவஞானசோதி இன்று (05) காலமானார்.
சிறந்த கல்விமானும் திறமையான நிர்வாக அதிகாரியுமான இவர், இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளில், அமைச்சுக்களின் செயலாளராக பதவி வகித்தவர்.
குறிப்பாக, மீள்குடியேற்ற அமைச்சு, இந்து கலாசார அமைச்சு, பாரம்பரிய சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, நல்லிணக்க அமைச்சு போன்றவற்றின் செயலாளராக இருந்தவர்.
தற்போது பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகவும் கடமையாற்றியவர்.
தமக்கு கிடைத்த இந்த பதவியைப் பயன்படுத்தி தமிழர் பிரதேசத்திற்கு தேவையான அபிவிருத்தித் திட்டங்களை முன்மொழிந்து நேரடியாக தானே சென்று பல திட்டங்களை மேற்பார்வை செய்து திறமையாக செய்து முடித்தவர்.
வடக்கு மாகாணத்தில் 10,000 பொருத்து வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுத்தபோது, அது வடக்கு மக்களுக்கு சரியானதாக அமையாது எனக் கூறி எதிர்த்தவர்.
வடக்கு – கிழக்கில் பல பாடசாலைகளுக்கு கட்டிடங்களை அமைப்பதற்கு முன்னின்று நிதி ஒதுக்கியவர்.
வலிகாமம் மேற்கில், வட்டு.இந்துக் கல்லூரி, சித்தங்கேணி சிறிகணேசா வித்தியாசாலை, பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகளுக்கு கட்டிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தவர். பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலைக்கு திறன் வகுப்பறையை ஏற்படுத்தித் தந்தவர்.
சுகவீனம் காரணமாக கொழும்பு அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பயனின்றி இன்று காலமானார்.