பிரித்தானியாவில் வாரத்திற்கு இரண்டு முறை அனைவருக்கும் இலவசமாக கோவிட் – 19 பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் அனைவருக்கும் Antigen விரைவுச் சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து சுகாதார செயலாளர் கருத்து வெளியிடுகையில்,
“கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக நாம் இழந்துவிட்ட பழைய வாழ்க்கை முறையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான் சிறந்த வழி. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.
தடுப்பூசி திட்டத்தில் நாங்கள் தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். அதனால் தற்போது இங்கிலாந்தில் உள்ள அனைவருக்கும் இலவச விரைவுச் சோதனை செய்வதற்கான வழிவகைகள் செய்துவருகிறோம்.
10க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு விரைவுச் சோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தலாம். மேலும் பாடசாலைகளில் வழக்கமான சோதனைகள் தொடரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவில் கோவிட்-19 பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், 2,762 பேர் பாதிக்கப்பட்டதோடு 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கோவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 6வது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 4,362,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 126,862 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 322,726 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 517 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 3,912,562 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.