குறைஷிகளின் கொடுமையிலிருந்து தப்பிக்க ஒவ்வொரு முஸ்லிமும் நாடு துறந்து நழுவி மதீனாவிற்கு இடம்பெயர்ந்தனர். வியாபாரக் கூட்டங்கள் யமன் நாட்டிற்கோ ஷாம் (சிரியா) நாட்டிற்கோ செங்கடலின் கரை வழியாகச் செல்ல மதீனாவைத் தாண்டிச் சென்றே ஆக வேண்டும். வியாபாரத்தின் தலைநகராக விளங்கிய மதீனா பாதுகாப்பானதாகத் திகழ்ந்தது, வெவ்வேறு வகையில் முக்கியத்துவம் வாய்ந்த மதீனாவில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடுவது தங்களுக்கு மாபெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று குறைஷிகள் பயந்தனர்.
இதற்கெல்லாம் மூலக் காரணமான நபி முஹம்மது (ஸல்) அவர்களை ஒழித்துக்கட்டத் தீர்மானித்தனர். நபித்துவத்தின் பதினான்காம் ஆண்டு நிறைவடைந்திருந்த நிலையில் நபிகளாரின் சகாப்தத்தை அஸ்தமிக்கக் குறைஷிகள் திட்டம் தீட்டினர். குறைஷிகளின் முக்கியப் பிரமுகர்கள் ஒன்றுகூடி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனை வழங்கினர். ஒருவர் நபிகளாரை ஊரைவிட்டு வெளியேற்றி, தொலைதூரத்தில் விட்டுவிடுவோமென்றார்.
அந்த யோசனை சரியல்ல “அந்த இடத்திலும் இஸ்லாமை பரப்பிவிடுவார்” என்று ஒருசிலர் மறுத்தனர். மற்றொருவர் “நபிகளாரைக் கடத்தி, ஓர் அறையில் அடைத்து, சாகும் வரை அப்படியே விட்டுவிடுவோம்” என்று ஆலோசனை கூறினார். அதையும் சிலர் மறுத்து, “அவருடைய தோழர்கள் கண்டுபிடித்து, நம்மை அழித்து அவரை விடுவித்துவிடுவர்” என்று கூறி வேண்டாமென்றனர்
கொடிய எண்ணத்தின் உருவான அபூ ஜஹ்ல் கூறினான் “ஒரு நபர் முஹம்மத்தைக் கொன்றால்தானே பிரச்சனை? நாம் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு வீரனைத் தேர்வு செய்து, அவர்கள் அனைவருமாகச் சேர்ந்து முஹம்மதை கொன்றுவிட்டால், கொலை செய்தவர் பல கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவன் தோழர்களும் உறவினர்களும் முஹம்மதைக் கொன்ற முழு அரபு சமுதாயத்தினரையும் பழிவாங்க இயலாது. நாளடைவில் அவர்கள் மறந்தே போய்விடுவார்கள்” என்று அவன் சொன்ன திட்டத்தை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். அதை எப்படி, எங்கு நிறைவேற்றுவது என்று பேசி திட்டமிட்ட பின் கலைந்து சென்றனர்.
அல்லாஹ் ஜிப்ரீல் (அலை) அவர்களை, நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் அனுப்பினான். “நபியே, நீங்கள் நாடு துறந்து ‘ஹிஜ்ரா’ செல்ல அல்லாஹ் அனுமதி தந்துவிட்டான். இன்று இரவு நீங்கள் வழக்கமாகத் தூங்கும் விரிப்பில் தூங்க வேண்டாம்” என்று நபிகளார் மக்காவைவிட்டு வெளியேறும் நேரத்தையும் அதற்கான வழிமுறைகளையும் வானவர் ஜிப்ரீல் கூறினார்.
நபி முஹம்மது (ஸல்) முகத்தை மறைத்தவராக அபூ பக்கர் (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்து, அபூ பக்கரின் அனுமதி பெற்று அவர்களின் வீட்டில் நுழைந்தார்கள். தங்களது பயணத் திட்டத்தைக் குறித்து விரிவாகச் சொன்னார்கள். உடனே அபூ பக்கர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நானும் உங்களுடன் வருகிறேன்” என்று கூறினார். நபிகளாரும் சரியென்று ஒப்புக் கொண்டார்கள்.
அன்றிரவு நபிகளார் வழக்கமாகத் தூங்கும் விரிப்பில் அலீ (ரலி) அவர்களைப் படுக்கச் செய்து நபிகளாரது போர்வையைப் போர்த்திக் கொள்ளச் செய்தார்கள். அலீ (ரலி) அவர்களுக்கு எந்த ஆபத்தும் நேராது என்றும் நபிகளார் வாக்களித்தார்கள்.
நபி முஹம்மது இரவில் நடுநிசையில் தொழுகைக்காக வீட்டைவிட்டு வெளியேறி, பள்ளிக்குச் செல்லும்போது அவர் மீது பாய்ந்து அவரது கதையை முடிக்கக் குறைஷிகள் சதித்திட்டம் செய்திருந்தனர்.
“நபியே! உங்களைச் சிறைப்படுத்தவோ அல்லது உங்களைக் கொலை செய்யவோ அல்லது உங்களை ஊரைவிட்டு அப்புறப்படுத்தவோ நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர், அவர்களுக்கெதிராக அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ்வே மிக மேலானவன்” என்ற திருக்குர்ஆனின் இறை வசனம் அருளப்பட்டது.
அல்லாஹ் தான் நாடியதை செய்யும் ஆற்றல் உடையவன். அவனே பாதுகாப்பளிப்பவன்.