ஒவ்வொரு நபரும் சுமார் 8 லிருந்து 10 டம்ளர் தண்ணீர் அருந்துவது அவசியமான ஒன்றாகும், ஒருவரின் உடல் எடை, பருமனை பொறுத்து இது வேறுபடும்.
தற்போது கோடை காலம் என்பதால் அதிகமாகவே தண்ணீர் தாகம் ஏற்படும், ஆனால் அளவுக்கு அதிகமானால் பல உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
அதாவது, தண்ணீர் அதிகமானால் ரத்தத்தில் உள்ள உப்பின் அளவு (சோடியம்) நீர்த்துப்போகும். அதனால் மூளையில் வீக்கம் ஏற்படும் – அதுவும் முதியவர்களுக்கு. அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும் ஒருவித போதையை ஏற்படுத்தும். உடலில் உள்ள சோடியமும் இதர உப்புக்களும் நீர்த்துவிடும்.
சரியான அளவில் தண்ணீர் குடிப்பவர்களின் சிறுநீர் வைக்கோல் நிறத்தில் (லேசான மஞ்சள்) இருக்கும். அது ஆரோக்கியத்தின் அடையாளம். அதுவே நிறமற்று பளிங்குபோல மாறினால், தேவைக்கும் அதிகமாகத் தண்ணீர் சேர்ந்துவிட்டதற்கான அறிகுறி.
மற்ற அறிகுறிகள்,
- குமட்டல்
- வாந்தி
- தலைவலி
- மனக் குழப்பம்
இதற்கு சிகிச்சை செய்யாமல் விட்டுவிட்டால், தசைகள் வலுவிழக்கும், தசைப்பிடிப்பு, இழுப்பு, வலிப்பு, சுயநினைவிழத்தல், ஆழ்ந்த நினைவிழப்பான கோமா நிலையை அடைதல் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லும்.
இதனை தடுக்க சீரான இடைவெளியில் தண்ணீர் அருந்த வேண்டும், ஒரே நேரத்தில் அதிகளவு குறிப்பாக சாப்பிட்டு முடித்ததும் தண்ணீரை குடிக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதுதவிர தண்ணீரை மட்டுமின்றி, பழச்சாறுகள், காய்கறி சூப், பால் ஆகியவற்றையும் அருந்த வேண்டும், 50 சதவிகிதம் தண்ணீர் மற்றும் 50 சதவிகிதம் மற்ற உணவுகளிலிருந்து தண்ணீர் என சீர் செய்து கொண்டால் உடல்நலனின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.