ஸ்ரீதர் தயாரித்த மாபெரும் வெற்றிப்படமான “கல்யாணப்பரி”சில், ஜெமினிகணேசன், சரோஜாதேவியுடன் விஜயகுமாரி இணைந்து
நடித்தார்.”குலதய்வம்” வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்ப்பட உலகில் நிரந்தரமான ஓர் இடத்தை விஜயகுமாரி தேடிக்கொண்டார்.
ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ், புத்தா பிலிம்ஸ் போன்ற பெரிய பட நிறுவனங்களில் இருந்து விஜயகுமாரிக்கு அழைப்புகள் வந்தன. ஆனால், அவர் ஏவி.எம். நிறுவனத்துடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தினால், மற்ற படங்களில் நடிக்க முடியாத நிலை இருந்தது.
இதை அறிந்த ஏவி.மெய்யப்ப செட்டியார், விஜயகுமாரியை அழைத்து, “உனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அதற்கு, நாங்கள் போட்ட ஒப்பந்தம் தடையாக இருக்கக்கூடாது. எனவே அதை ரத்து செய்து விடுகிறோம். இனி நீ எல்லாப் படங்களிலும் நடிக்கலாம். நீ பெரிய நடிகையாக வருவாய்” என்று கூறினார்.
நெகிழ்ந்து போன விஜயகுமாரி, அவர் காலைத்தொட்டு வணங்கி, ஆசி பெற்றார்.
ஜெமினியின் “வஞ்சிக்கோட்டை வாலிபன்” படத்தில், ஜெமினிகணேசனின் தங்கையாக நடித்தார். அந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதே படத்தை, இந்தியிலும் ஜெமினி எடுத்தது. தமிழில் நடித்த அதே வேடத்தில், இந்தியிலும் விஜயகுமாரி நடித்தார். இதுவும் பெரிய வெற்றிப்படம்.
விஜயகுமாரிக்கு இந்திப் படங்களில் நடிக்கவும் அழைப்புகள் வந்தன. அவர் கவனம் முழுவதும், தமிழில் சிறந்த இடத்தைப் பெறவேண்டும் என்பதிலேயே இருந்தது. அதனால் அவர் இந்திப்பட உலகின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அவர் நடித்த ஒரே இந்திப்படம், “ராஜ்திலக்” (வஞ்சிக்கோட்டை வாலிபன் இந்திப்பதிப்பு) மட்டுமே.
புத்தா பிலிம்ஸ் தயாரித்த “பதிபக்தி”யில் சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சாவித்திரி, எம்.என்.ராஜம் ஆகியோருடன் விஜயகுமாரியும் நடித்தார். இதில், விஜயகுமாரிக்கு, ஜெமினிகணேசனின் முறைப்பெண் வேடம்.
பீம்சிங் டைரக்ட் செய்த இந்தப்படம் மெகா ஹிட் படமாகும்.
கதை-வசன கர்த்தாவாக இருந்த ஸ்ரீதர், முதல் முதலாக டைரக்ட் செய்த படம் “கல்யாணப்பரிசு.” தமிழ்ப்பட உலகில், ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்த படம் இது.
ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில், விஜயகுமாரியும், சரோஜாதேவியும் அக்கா – தங்கையாக நடித்தனர். விஜயகுமாரிக்காக சரோஜாதேவி தன் காதலை தியாகம் செய்வார்.
திருப்பங்கள் நிறைந்த இந்த முக்கோணக் காதல் கதையை, ஒரு காவியமாக உருவாக்கியிருந்தார், ஸ்ரீதர். 9-4-1959-ல் வெளிவந்து வெள்ளி விழா கண்ட இப்படத்தின் மூலம், விஜயகுமாரி மேலும் புகழ் பெற்றார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “பெற்ற மகனை விற்ற அன்னை” படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் இணைந்து நடித்தனர். மனோகர், பண்டரிபாய் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். பாடல்கள், படப்பிடிப்பு எல்லாம் சிறப்பாக அமைந்தபோதிலும் படம் வெற்றி பெறவில்லை.
இந்தக் காலக்கட்டத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் இணைந்து, விஜயகுமாரி பல நாடகங்களிலும் நடித்தார்.
அதுபற்றி விஜயகுமாரி கூறுகிறார்:-
“நாங்கள் நடித்த நாடகங்களில் கலைஞர் எழுதிய “மணி மகுடம்” பெரும் புகழ் பெற்றது. மற்றும் “தென்பாண்டிய வீரன்”, “புதுவெள்ளம்”, “முதலாளி”, “முத்து மண்டபம்” போன்ற நாடகங்களை நாங்கள் நடத்தினோம்.
நாடகங்களில் நடித்துக் கொண்டே “மனைவியே மனிதனின் மாணிக்கம்”, “கைதியின் காதலி”, “தங்க மனசு தங்கம்” போன்ற படங்களிலும் நடித்தேன்.
அந்த சமயத்தில் நாங்கள் “தங்கரத்தினம்” என்ற படத்தை தயாரித்தோம். இந்தப்படத்தில் நான் ஆதிதிராவிடப் பெண்ணாக நடித்தேன். சாதியில் ஏற்ற தாழ்வு கிடையாது, எல்லோருடைய உடம்பிலும் ஓடுவது ஒரே ரத்தம்தான். எல்லோரும் மனிதசாதி” என்ற தத்துவத்தை சொல்லும் கதை.
இந்த படத்தில், அப்போது பழனியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் அண்ணா பேசுவது, கலைஞர் பேசுவது முதலான காட்சிகள் இடம் பெற்றன. மக்கள் இதை மிகவும் வரவேற்றார்கள்.
இந்தப்படம் முடியும்போது நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தேன்.
அதனால் நாடகங்களில் நடிக்க முடியவில்லை. எனவே, “மணிமகுடம்” நாடகத்தில் எனக்கு பதிலாக நடிக்க கோவையிலிருந்து ஒரு பெண் வந்திருந்தார். அவரால் கலைஞர் எழுதிய வசனங்களை பேச முடியவில்லை. ஆகவே மணிமகுடம் நாடகத்திற்குப் பதிலாக “தென்பாண்டிய வீரன்” என்ற நாடகத்தை நடத்தினோம்.
அந்தப் புது நடிகை யார் தெரியுமா? பிற்காலத்தில் மலையாள பட உலகில் கொடிகட்டிப் பறந்த “செம்மீன்” பட நாயகி ஷீலாதான்!
மருத்துவமனையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. என் குழந்தைக்கு டாக்டர் வாதிராஜம் அவருடைய மனைவியும்தான் பெயர் சூட்டினார்கள். என் கணவரின் முதல் எழுத்தான “ர”, என்னுடைய பெயரின் முதல் எழுத்தான “வி” இந்த இரண்டையும் சேர்த்து ரவிக்குமார் என்ற பெயர் வைத்தார்கள்.
குழந்தை பிறப்பதற்கு முன் வீமண்ண முதலி கார்டனில் குடியிருந்தேன். இது எனக்கு சொந்த வீடு. குழந்தை பிறந்த பிறகு, என் கணவர் அவருடைய முதல் மனைவி பங்கஜம் அக்காளுடன் இருந்த தேனாம்பேட்டை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அந்த காம்பவுண்டுக்குள் மூன்று வீடுகள். அடுத்தடுத்து இருந்தன. அதில் ஒரு வீட்டில், என் கணவரின் முதல் மனைவி பங்கஜம் அக்காள் அவர்களுடைய குழந்தைகளும், மற்றொரு வீட்டில் என் கணவரின் தங்கையும் அவருடைய கணவர் டி.வி.நாராயணசாமியும் அடுத்த வீட்டில் நானும் என் மகனும் இருந்தோம். அப்பா, பாட்டி, அக்காள், தங்கை, அக்காளுடைய மகள் ஆகியோரும் என்னுடன் இருந்தார்கள்.
நாங்கள் தனித்தனி வீட்டில் இருந்தாலும், எல்லோரும் ஒரே குடும்பத்தில் இருப்பதுபோல், ஒற்றுமையாக – சந்தோஷமாக இருந்தோம். அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் என் மனதில் இன்னும் நிழலாடுகின்றன.
தைப்பொங்கல் வந்துவிட்டால் எங்கள் வீடு திருவிழா கோலம் பூண்டுவிடும். என் கணவரும், நானும் பொங்கல் அன்று காலை 6 மணிக்கு போர்ட்டிகோவில் வந்து நிற்போம். நாடக கம்பெனியில் உள்ளவர்கள், சினிமாத் துறையில் உள்ளவர்கள், கட்சியைச் சேர்ந்தவர்கள், ரசிகர் மன்றத்தினர், நரிக்குறவர்கள் கூடியிருப்பார்கள். ஒருபக்கம் நாதஸ்வரம் ஒலி ஒலித்துக்கொண்டிருக்கும்.
பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகஆட்டம் என்று வீடே கலகலப்பாக இருக்கும், பிறகு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுச்
செல்வார்கள்.இதெல்லாம் என் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத இனிய நிகழ்ச்சியாகும்.
அறிஞர் அண்ணா அவர்களின் 50-வது பிறந்த நாள் விழாவை எங்கள் வீட்டில் கொண்டாடினோம். அப்போது ஒரு வெள்ளித்தட்டில் 50 தங்கக் காசுகளை வைத்து அண்ணா அவர்களிடம் என் கணவர் கொடுத்தார்.
எனக்கு குழந்தை பிறந்து 2 மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன். மாடர்ன் தியேட்டர் படம் “குமுதம்” படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். எனக்கு ஜோடி என் கணவர். இதில் ரங்காராவ், பி.எஸ்.சரோஜா, சவுகார்ஜானகி, எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்தோம்.
சுப்பையா டைரக்ட் செய்ய, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனம் எழுதினார்.
இந்தப் படத்தில் எனக்கு வக்கீல் வேடம். காதலனுக்காகவும், காதலன் மனைவிக்காகவும் கோர்டடில் என் தந்தையை எதிர்த்து வாதாடி ஜெயித்து, தன் வாழ்க்கையை தியாகம் செய்யும் ஒரு பெண்ணின் கதை.
இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து முதல்தர நாயகி அந்தஸ்தை எனக்குத் தேடித்தந்தது.
– இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.