மியான்மரில் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் 19 போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மியான்மரில் யாங்கன் நகரின் வட ஒக்காலப்பா மாவட்டத்தில் மார்ச் 27ம் திகதி ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலைக்கு திட்டமிட்ட 19 போராட்டக்காரர்களுக்கு தற்போது ராணுவத்தின் அறிவுறுத்தலின் பெயரில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 1ம் திகதி துவங்கி ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ம் திகதியிலிருந்து ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. இதையடுத்து அங்கு தொடர் போராட்டம் நீடித்து வருகிறது.
ராணுவத்துக்கும் ஜனநாயக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் இதுவரை 500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடக்கம். மியான்மர் ராணுவத்துக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் தங்கள் நாட்டுக்கு வரத்தடை விதித்தன.
இருப்பினும் இந்த விவகாரத்தில் தலையிட்டு சுமூக தீர்வு எட்ட வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
தற்போது, ராணுவத்துக்கு எதிரான புரட்சிகர குழுக்கள் பல தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன.
முக்கியத் தலைவர்கள் தற்போது வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு ஏற்பட்டதாகவும் அதன் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.