கொரோனா கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால், இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் 30 பேர்கள் மட்டுமே பங்கேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரித்தானிய இளவரசர் பிலிப் தமது 99 வயதில் வின்ட்சர் கோட்டையில் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் எதிர்வரும் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட உள்ளது.
தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் சூழல் காரணமாக மொத்தமாக 30 பேர்கள் மட்டுமே இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியும்.
உண்மையில் உலகெங்கிலும் இருந்து 800 விருந்தினர்களுடன் மிக விமரிசையாக நடத்தவே அரச குடும்பம் திட்டமிட்டிருந்தது.
ஆனால், இது தொடர்பில் இளவரசர் பிலிப் மாறான கருத்தை கொண்டிருந்ததாகவும், அவர் விருப்பப்படி, மிக எளிமையாக நடத்தவே முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், இறுதிச் சடங்கில் பங்கேற்கும் அந்த 30 பேர்கள் தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.
ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் நான்கு பிள்ளைகள் மற்றும் அவர்களின் துணைவர்கள், அரச குடும்பத்து இளவரசிகள், வைஸ் அட்மிரல் சர் திமோதி லாரன்ஸ் ஆகியோர் கண்டிப்பாக பங்கேற்பார்கள்.
இளவரசர் பிலிப்- ராணியார் தம்பதியின் 8 பேரப்பிள்ளைகள், வருங்கால ராணியாக பொறுப்பேற்க வாய்ப்புள்ள கேட் மிடில்டனும் இந்த 30 பேர்கள் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது.
மேலும், மூத்த உறுப்பினர்கள் அல்லாதோருக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என்றே கூறப்படுகிறது. ஆனால் இளவரசர் ஹரி தற்போது மூத்த உறுப்பினர் அல்ல என்றாலும், 30 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெறுவார் என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, ராணியாரின் உறவினர்கள் சிலருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் கர்ப்பிணி என்பதால் கலந்து கொள்ளாத நிலையில், 30 என்ற எண்ணிக்கையை தொட, பிரித்தானிய ராணுவ தளபதிகளில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கட்டும் என்பதால், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், 30 பேர்கள் கொண்ட பட்டியலில் தம்மை உட்படுத்த வேண்டாம் என ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.