மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு நிகழ்வில் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இடத்தை ராயல் குடும்பத்தினருக்கு விட்டுக்கொடுத்துள்ளார்.
இது குறித்து போரிஸ் ஜான்சன் தனது செய்தி தொடர்பாளர் மூலம் வெளியிட்ட அறிக்கையில் “அரச குடும்பத்தின் தேவைக்கு ஏற்ப செயல்பட விரும்பினேன், ஆகவே முடிந்தவரை அதிகமான குடும்ப உறுப்பினர்களை அனுமதிக்க இறுதி சடங்கில் நான் கலந்து கொள்ள மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
பிரித்தானிய ராணி எலிசபெத்தின் கணவர் மற்றும் எடின்பர்க் டியூக் இளவரசர் பிலிப், தனது 99 வயதில் விண்ட்சர் கோட்டையில் வெள்ளிக்கிழமை காலமானார்.
இளவரசர் பிலிப்பிற்கான இறுதிச் சடங்கு நிகழ்வு ஏப்ரல் 17-ஆம் திகதி விண்ட்சர் கோட்டையின் மைதானத்திற்குள் நடைபெறவுள்ளது. அதில், நெருங்கிய அரச குடும்பத்தினர் மட்டும் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.