அன்புடன் அப்பா…
அப்படித்தான் தான் டயானாவுக்கு எழுதிய கடிதங்களில் கையெழுத்திட்டிருக்கிறார் இளவரசர் பிலிப்.
எப்படி பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாமல் இளவரசர் பிலிப்பை ராணி எலிசபெத்துக்கு சம்மந்தம் பேசினார்களோ, அதேபோலத்தான் எந்த சம்பந்தமும் இல்லாமல் ராஜ குடும்பத்துக்குள் வந்தவர் இளவரசி டயானா.
ஆகவே, அவரது உணர்வுகளை புரிந்துகொள்ளும் ஆற்றல் இளவரசர் பிலிப்புக்கு இருந்ததில் ஆச்சரியமில்லை.
ஆகவேதான் இளவரசி டயானா, ராஜ குடும்பத்திலேயே தனக்கு செவிகொடுக்கும் ஒரே நபராக இளவரசர் பிலிப்பை மனதார நம்பியிருக்கிறார்.
ஒருமுறை, தோழிகளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, எத்தனை மனைவிகள் தங்கள் திருமண வாழ்வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தங்கள் கணவருடன் பேசாமல் தங்கள் மாமனாருடன் கலந்துரையாடுவார்கள் என்று கேட்டாராம் டயானா.
ஆனால், தனது திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்பட்டபோது, தன் மாமனாருடன்தான் அதை பகிர்ந்துகொண்டார் டயானா! எல்லோரும் இளவரசர் பிலிப்பை முன் கோபக்காரராகவும் மனதில் என்ன தோன்றினாலும் யோசிக்காமல் பேசுபவராகவும் பார்த்தபோது, இளவரசி டயானாவுக்கு மட்டும் கடினமானவரானாலும், தன்னை நன்றாக புரிந்துகொண்டவராக தெரிந்தார் பிலிப்.
1982ஆம் ஆண்டு, இளவரசர் வில்லியம் பிறந்த நேரத்தில் மனச்சோர்வடைந்திருந்த டயானாவைக் கண்டவர்கள் அவர் பிரசவம் காரணமாக மன அழுத்தத்திற்குள்ளாகியிருப்பதாக நினைத்தார்கள்.
ஆனால், தன் கணவருக்கு கமீலா பார்க்கர் என்னும் திருமணமான பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக டயானா கூறியபோது, ராணியோ அல்லது பிலிப்போ அதை நம்பவில்லை. பிறகுதான் அவர் கூறியது உண்மை என்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
அந்த நேரத்தில் யாருமே டயானாவை கண்டுகொள்ளாதபோது, அவர் மீது அவ்வளவு இரக்கமும் அக்கறையும் காட்டினாராம் பிலிப்.
மகனுக்கும் மருமகளுக்கும் பிரச்சினை என்பது தெரிந்த பிறகு கூட, அவர்கள் இருவரும் அரண்மனையிலேயே ஆளுக்கொரு பக்கம் இருக்கட்டும், அவர்கள் பிரியக்கூடாது என்பதில் அவ்வளவு முயற்சி எடுத்துக்கொண்டாராம் பிலிப்.
ஆனால், அதற்குப் பின் இளவரசி டயானா வெளிப்படையாக தன் கணவர் இளவரசர் சார்லசுக்கும் கமீலா பார்க்கருக்கும் தொடர்பு இருப்பதாகவும், தானும் James Hewitt என்பவரும் தொடர்பு வைத்திருப்பதாகவும் உலகமே பார்க்கும் வகையில் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளிக்க, அது பிலிப்பை கோபப்படுத்தியது.
குறிப்பாக, அந்த பேட்டியில் தன் மகனான இளவரசர் சார்லஸ் மன்னராகும் தகுதியற்றவர் என்றும் கூறியிருந்த விடயம் பிலிப்பை ஆத்திரமடையச் செய்தது. கடைசி வரை டயானா பிலிப்பை அப்பா என்றும் மகாராணியாரை அம்மா என்றும் அழைத்துவந்தாலும், சார்லஸும் டயானாவும் பிரிந்தபிறகு டயானா பிலிப்புக்கு இடையிலான கடிதப்போக்குவரத்து நின்று போனது.
என்றாலும், இளவரசர் பிலிப்பைப் பொருத்தவரை, சார்லஸ் கமீலாவை மணந்த பின்னரும்கூட, தனது மகனின் முதல் திருமணத்தை காப்பாற்ற முடியவில்லையே என்ற ஏமாற்றத்தை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை என்பது மட்டும் நிஜம்!