தனது படங்களின் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கிய ரசிகரை நேரில் சந்தித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சென்னையை சேர்ந்த கிரிஷ் மாத்ருபூதம் என்பவர்,கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பிரெஷ் டெஸ்க் என்ற மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர்,தனது நிறுவன ஊழியர்களுக்காக எந்திரன்,கோச்சடையான்,லிங்கா மற்றும் கபாலி ஆகிய படங்களின் ஒரு காட்சியின் மொத்த டிக்கெட்டுகளையும் வாங்கி வந்தார்.மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்திப்பது தனது மிகப்பெரிய கனவு என்றும் தெரிவித்து வந்தார்.
கிரிஷ் குறித்து அவரது நண்பர்கள் மூலம் அறிந்த சூப்பர் ஸ்டார்,அவரை நேரில் சந்திக்க விரும்பியுள்ளார்.இதனைத் தொடர்ந்து தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் நேற்று முன் தினம் ரஜினிகாந்த் வீட்டிற்கு அவரை சந்திப்பதற்காக கிரிஷ் அழைக்கப்பட்டுள்ளார்.
காலை 9 மணிக்கு ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்ற அவர்கள் மூவருக்கும் மோர் அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் ரஜினியை பார்க்கும் ஆர்வத்தில் மோர் வேண்டாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் ஏதும் குடிக்காமல்,அவர்களை தலைவர் சந்திப்பதில்லை என பணியாளர்கள் கூறியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து மூவரும் மோர் அருந்தியுள்ளனர்.அதன் பின்னர் 9.30 மணி அளவில் ரஜினிகாந்த் கிரிஷை சந்தித்துள்ளார்.
”அவரைக் கண்டதுமே என்ன பேசுவது என தெரியவில்லை.என் மகனின் கையில் இருந்த பரிசுபொருளை பார்த்ததும்,வாஞ்சையுடன் அதனை பெற்றுக் கொண்டார்.பின்னர் எங்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.அவரை சந்தித்தன் மூலம் பிறவிப் பயனை அடைந்தேன்.”என கிரிஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.