பணமோசடி, பயங்கரவாத நிதியுதவி தொடர்பாக அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்தது பிரித்தானிய அரசு.
பிரித்தானியா 3ZA எனும் அட்டவணையின் கீழ் அல்பேனியா, பார்படாஸ், போட்ஸ்வானா, புர்கினா பாசோ, கம்போடியா, கேமன் தீவுகள், வட கொரியா, கானா, ஈரான், ஜமைக்கா, மொரீஷியஸ், மொராக்கோ, மியான்மர், நிகரகுவா, பனாமா, செனகல், சிரியா, உகாண்டா, ஏமன் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளை அதிக ஆபத்துள்ள மூன்றாம் நாடுகளின் பட்டியலில் வைத்திருக்கிறது.
பிரித்தானிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த வகையிலான நாடுகள் பலவீனமான வரிக் கட்டுப்பாடுகள் மற்றும் பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடி ஆகியவற்றில் சீரமைப்பு மற்றும் சமநிலை இல்லாததால் பல வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நாடுகளாக கருதப்படுகிறது.
அதன்படி, பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரித்தானியா அதன் ‘அதிக ஆபத்துள்ள நாடுகளின்’ பட்டியலில் தற்போது பாகிஸ்தானை 21-வது நாடாக சேர்த்துள்ளது.
இந்த விதிமுறை மார்ச் 26 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், பிரித்தானியா எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜாஹித் ஹபீஸ் சவுத்ரி, ‘பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி உயர்-ஆபத்துள்ள நாடுகள்’ பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க பிரித்தானியா எடுத்த முடிவு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல, அவை “அரசியல் நோக்கம் கொண்டவை” என்ரூ குற்றம் சாட்டியுள்ளார்.