ஸ்ரீலங்காவின் சிவில் சமூக செயற்பாட்டாளரும் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான அசேல சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொம்பனித்தெரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிவில் சமூக செயற்பாட்டாளரும் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான அசேல சம்பத் தனது உத்தியாகபூர்வ முகநுால் பக்கத்தில் காணொளி ஒன்றை இன்று வெளியிட்டிருந்தார். அதில் காவல்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்லுவது பதிவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அசேல சம்பத் கைது செய்யப்பட்டதை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சதோச வர்தக நிலையங்கள் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதி தொடர்பாக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாக தெரிவித்து அவருக்கு எதிராக அண்மையில் அமைச்சர் பந்துல குணவர்தன குற்றப் புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.