அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக தனது மகளின் கணவரும் பிரபல கோடீஸ்வர தொழிலதிபருமான ஜேரட் குஷ்னர் என்பவரை அந்நாட்டின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று வரும் 20-ம் திகதி பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தனது தலைமையிலான ஆட்சியில் இடம்பெறவுள்ள மந்திரிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளை நியமித்து வருகிறார்.
அவ்வகையில், அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக தனது மகள் இவான்கா என்பவரின் கணவரும் பிரபல கோடீஸ்வர தொழிலதிபருமான ஜேரட் குஷ்னர்(35) என்பவரை அந்நாட்டின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் பணியாற்றும் உயரதிகாரிகளை கண்காணித்து வரும் மூத்த உயரதிகாரி ரெயின்ஸ் ப்ரிய்பஸ் மற்றும் ஸ்டீப் பேன்னான் ஆகியோருடன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜேரட் குஷ்னர் இணைந்து பணியாற்றுவார் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தேர்தல் பிரசார காலத்தில் இருந்தே தனக்கு உறுதுணையாகவும் வெற்றிகரமாகவும் பணியாற்றிவந்த ஜேரட் குஷ்னர், புதிய மந்திரிகள் மற்றும் உயரதிகாரிகளை தேர்வு செய்யும் விவகாரத்திலும் தனக்கு உதவியுள்ளதாக குறிப்பிட்டுள்ள டிரம்ப், தொழிலதிபராகவும் தற்போது அரசியலிலும் வெற்றிகரமான நபராக அறியப்படும் அவரை இந்த பொறுப்பில் நியமிப்பதை எண்ணி பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப்பை போலவே ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்களை நடத்திவரும் ஜேரட் குஷ்னர் குடும்ப சொத்து மதிப்பு சுமார் 180 கோடி டாலர்களாக முன்னர் மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நியமத்தை மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள ஜேரட் குஷ்னர், இந்த வேலைக்காக அரசுப் பணத்தில் இருந்து சம்பளம் ஏதும் பெறப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.